| ADDED : ஜூலை 05, 2024 04:16 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்மல்லியைச் சேர்ந்த 4 வயது குழந்தைக்கு மூளையில் கோர்த்துள்ள சீழ், நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் 66, மூளை தண்டுவட திரவு கசிவு பாதிப்பு ஆகியவற்றை முதல்முறையாக விருதுநகர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து சாதனை படைத்துள்ளனர்.ஸ்ரீவில்லிப்புத்துார் அருகே மல்லியைச் சேர்ந்த 4 வயது குழந்தை காய்ச்சல், வலிப்புடன் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் ஜூன் 7ல் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதனை செய்ததில் மூளையில் சீழ் கோர்த்து இருப்பது தெரிந்தது. இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கணபதி வேல் கண்ணன் தலைமையில் குழந்தைகள் நல மருத்துவர்கள் வெங்கட்ராமன், அரவிந்த்பாபு இணைந்து அறுவை சிகிச்சை செய்து மூளையில் கோர்த்திருந்த சீழ் முழுவதையும் அகற்றினர்.இதை பரிசோதனைக்காக அனுப்பி கிடைத்த முடிவில் சற்று வீரியமான கிருமித்தொற்று இருப்பதுகண்டறிந்து அதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் குழந்தைக்கு முதன்மை நோய் எதிர்ப்பு குறைபாடு நோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரத்த மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சை அளித்ததில் பக்க விளைவுகள் எதுவும் இன்றி குழந்தை நலமாக உள்ளார்.நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் 66. இவர் கடந்த இரண்டு மாதமாக மூக்கில் இருந்து நீர் கசிந்து வருவதாகவும், தீராத தலை வலி இருப்பதாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ஜூன் 10ல் வந்தார். இவரை பரிசோதனை செய்ததில் மண்டை ஓட்டின் கீழ் பகுதியில் சிறு பிளவு இருப்பதும், அதனால் மூளையில் தண்டுவட திரவு கசிவு இருப்பதும் கண்டறியப்பட்டது.இவருக்கு ஜூலை 1 காலை 9:00 மணிக்கு டீன் சீதாலட்சுமி ஆலோசனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு துறைத் தலைவர் கருப்பசாமி தலைமையில் டாக்டர்கள் மேதியூ ஜாக்சன், சகானா, பிரியங்கா உட்பட மருத்துவர்கள் பலர் இணைந்து தொடை, மூக்கில் இருக்கும் ஜவ்வு எடுத்து மண்டை ஓட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள பிளவை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்தனர். தற்போது சிகிச்சை முடிந்து பால்ராஜ் நலமுடன் உள்ளார்.