| ADDED : ஜன 07, 2024 03:54 AM
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மைக்கல்வி, மாவட்ட திட்டம், நில அளவை, புள்ளியல், குடும்ப நலம், கைத்தறி, சுகாதாரத்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த அலுவலக ஊழியர்களுக்கு சுத்தமான கழிப்பறை இல்லாததால், திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது.திறந்த வெளியை பயன்படுத்துவதால் சிறுநீர் தொற்றுகள், உடல் உபாதைகளால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயாளிகள், வயதானவர்கள் செல்ல இடமில்லாததால் சிரமப்படுகின்றனர்.இந்த பகுதி முழுவதும் புதர்மண்டி இருப்பதால் விஷப்பூச்சிகள், பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் ஊழியர்கள் செல்வதற்கே அஞ்சுகின்றனர். வேறு வழியில்லாததால் பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாக புலம்புகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணிகள் முடியும் வரை தற்காலிக கழிப்பிடம் ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.