| ADDED : பிப் 12, 2024 04:26 AM
மாவட்டத்தில் கோடை துவங்கும் முன்பே வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இப்போதே மக்கள் வெளியில் நடமாட சிரமப்படுகின்றனர். மலைப்பகுதிகள், விவசாய நிலங்கள், ரோட்டோரங்களில் இருந்த செடி, கொடிகள், மரங்களின் இலைகள் வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சருகுகளாக கிடக்கின்றன. கீழே குவிந்து கிடக்கும் இவற்றில் மர்ம நபர்கள் தீ வைப்பதால் தீ மள மளவென எரிந்து மற்ற இடங்களுக்கும் பரவுகிறது.மக்கள் வேடிக்கை பார்த்து செல்வரே தவிர, தீயை கட்டுப்படுத்த யாரும் முன் வருவதில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் காய்ந்து கிடக்கும் செடிகளில் வைக்கப்படும் தீ பரவி, அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுவதுடன், விலைமதிப்பற்ற மரங்கள், மூலிகை செடிகள் கருகி நாசமாகின்றன.அவ்வாறு பரவும் தீயை தீயணைப்புத் துறை வீரர்களால் கூட கட்டுப்படுத்துவது கடினம். மலைப்பகுதி முழுவதும் பரவி முற்றிலும் எரிந்து விடும் அபாயம் உள்ளது.அதே போல் மதுரை- - தூத்துக்குடி, மதுரை- - கன்னியாகுமரி நான்கு வழிச் சாலைகளில் சென்டர் மீடியனில் அரளிச் செடிகள் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில் முளைத்துள்ள களைச் செடிகள் தற்போது காய்ந்து வருகின்றன. காய்ந்த களைச்செடியில் மர்ம நபர்கள் தீ வைக்கின்றனர். காற்றுக்கு தீ பரவி, பசுமையாக இருக்கும் அரளி செடிகளும் தீக்கிறையாகின்றன.இதிலிருந்து வெளியாகும் வெப்பம், புகையினால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுள்ள ரோட்டோரம் காய்ந்த செடிகளில் பரவி குடியிருப்புகள், அப்பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகள் பற்றி எரியும் வாய்ப்புள்ளது. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைவதுடன் பல்வேறு உயிரினங்கள் பாதிப்படைய கூடும்.கோடைகாலம் துவங்கி விட்டாலே மர்ம நபர்கள் தீ வைப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மலைப்பகுதி, ரோட்டோரம் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும். தீ வைக்கும் மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.