| ADDED : ஜன 01, 2024 05:04 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகாவில் கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தாத நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்களும் எதிர்பார்க்கின்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாடுகளை தயார் படுத்தி வருகின்றனர்.வத்திராயிருப்பு தாலுகாவில் கான்சாபுரம், நெடுங்குளம், சேது நாராயணபுரம், மகாராஜபுரம், வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலம். இப்போட்டிகளில் பங்கேற்க உள்ளூர் மாடுகள் மட்டுமின்றி தேனி, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மாடுகளும் கொண்டுவரப்பட்டு, மாடுபிடி வீரர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் போட்டிகள் நடப்பது வழக்கம்.இப்பகுதியில் பல வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போட்டிகள் நடத்தப்படவில்லை. ஓரிரு கிராமங்களில் நடத்துவதற்கு அனுமதி கேட்டும் கடந்த காலங்களில் அரசு நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.தற்போது ஜல்லிக்கட்டு சீசன் துவங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாடு வளர்ப்பாளர்களும், மாடுபிடி வீரர்களும் எதிர்பார்க்கின்றனர்.இந்நிலையில் தங்கள் பகுதியில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா, நடக்காதா என்ற சூழல் இருக்கும் நிலையில் பிற மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக, தாங்கள் வளர்க்கும் மாடுகளுக்கு மூச்சுப் பயிற்சி, ஓட்ட பயிற்சி, முட்டும் பயிற்சிகளை உரிமையாளர்கள் மாடுகளுக்கு அளித்து வருகின்றனர்.