காரியாபட்டி: சேறும் சகதியுமான வீதிகள், வாறுகால் இல்லாததால் வீதியில் தேங்கும் கழிவுநீர், தாழ்வான மின் இணைப்பு பெட்டி, கூடுதல் குடிநீர் தேவை என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி காரியாபட்டி சிலோன் காலனி மக்கள் தவிக்கின்றனர்.காரியாபட்டி சிலோன் காலனியில் மழை நேரங்களில் மழை நீர் தேங்கி, சேறும் சகதியமாக இருப்பதால் மக்கள் நடமாட முடியவில்லை. குப்பை தொட்டி வைக்காததால் அங்குள்ள ஓடையில் கொட்டுகின்றனர். கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது.மழை நேரங்களில் ஓடையில் தண்ணீர் தேங்குவதால் கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். போதிய தெருவிளக்குகள் கிடையாது. இரவு நேரங்களில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். புழக்கத்திற்கான தண்ணீர் சப்ளைக்கு தரை தள தொட்டி உள்ளது. தொட்டி சேதமடைந்து நீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. மின் இணைப்பு பெட்டி தாழ்வாகவும் சேதமடைந்தும் காணப்படுகிறது. மழை நேரங்களில் மழை நீர் தேங்கி மின்சாரம் பாயும் ஆபத்து உள்ளது. தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் சப்ளை தேவை
சின்னையா, தனியார் ஊழியர்: பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தரைதள தொட்டி சேதமடைந்துள்ளதால் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது புதிய தொட்டி கட்ட வேண்டும். மின் இணைப்பு பெட்டி ஓடையில் அமைந்துள்ளதால் மழை நேரங்களில் தண்ணீரில் மூழ்கி மின்சாரம் பாயும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. குழாய்கள் சேதம் அடைந்துள்ளன. ஒரே ஒரு குழாய் மட்டும் இருப்பதால் இப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. கூடுதல் தரைதள தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேவர் பிளாக்பதிக்க வேண்டும்
ராஜலட்சுமி, குடும்பத் தலைவி: மழை நேரங்களில் ஓடையில் மழை நீர் இடுப்பளவு தேங்குகிறது. கடந்து செல்ல முடியவில்லை. பாலம் அமைக்க வேண்டும். மழை நேரங்களில் வீதிகளில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளன. புதர் மண்டி கிடப்பதால் நடமாட முடியவில்லை விஷ பூச்சிகளின் நடமாட்டம் இருப்பதால் அச்சத்துடன் நடக்க வேண்டி இருக்கிறது. பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். வாறுகால் வசதி கிடையாது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீதிகளில் தேங்குகிறது. தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்குகள் இல்லை
பாண்டியம்மாள், குடும்பத் தலைவி: குடிநீருக்கு ஒரே ஒரு குழாய் மட்டுமே உள்ளது. இப்பகுதியில் உள்ள அனைவரும் ஒரே இடத்தில் பிடிப்பதால் சிரமம் ஏற்படுகிறது.குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கசிவு ஏற்பட்டு பம்ப் ரூம் பாசி படர்ந்து உள்ளது. ஜல் ஜீவன் திட்ட குடிநீர் குழாய் பதிக்க வேண்டும். வீதிகளில் சரிவர தெரு விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் நடமாட அச்சமாக உள்ளது. கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.குப்பைத்தொட்டி இல்லாததால் குப்பைகளை ஓடையில் கொட்ட வேண்டிய நிலை உள்ளது. குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.