விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் விரிவுபடுத்தப்பட்ட டூவீலர் பார்க்கிங் தேவை
விருதுநகர் : விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் போதிய இட வசதி இல்லாமல் இருப்பதால் வாகனங்களை மரத்தடியில் வெயில், மழையில் பயணிகள் நிறுத்தி செல்கின்றனர். பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விரிவுபடுத்தப்பட்ட டூவீலர் பார்க்கிங் வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். விருதுநகரில் புது பஸ் ஸ்டாண்ட் கடந்தாண்டு ஆக. 21ல் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு பயணிகளின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வசதிகளாக ஏற்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ராஜபாளையம், மதுரை, ஸ்ரீவில்லிப்புத்துார், வத்திராயிருப்பு, கோவில்பட்டி உள்பட வெளியூர்களுக்கு தினசரி வேலைக்காகவும், படிக்கவும் சென்று வருபவர்கள் தங்களின் டூவீலர்களை புது பஸ் ஸ்டாண்டில் டூவீலர் பார்க்கிங் செட்டில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். தற்போது புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்லும் பஸ்கள் ,பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் வெளியூர் செல்பவர்களின் டூவீலர்களை நிறுத்த போதிய இட வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள மரத்தடியில் ஆங்காங்கே வெயில், மழையில் நின்று பாழாகும் நிலையில் டூவீலர்களை நிறுத்த வேண்டிய நிலையே தொடர்கிறது. அடுத்த மாதம் வந்தால் புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வந்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் விரிவுபடுத்தப்பட்ட டூவீலர் பார்க்கிங் வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்துவது அவசியமாகியுள்ளது. மேலும் டூவீலர் பார்க்கிங் பகுதியில் வாகன திருட்டு நடக்காமல் தடுக்க சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணிகளை செய்ய வேண்டும். எனவே விருதுநகர் புது ஸ்டாண்ட்டில் பயணிகளின் தேவை அறிந்து அடிப்படை வசதிகளையும், விரிவுப்படுத்தப்பட்ட டூவீலர் பார்க்கிங் வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.