| ADDED : ஏப் 25, 2024 05:19 AM
விருதுநகர் : ஓட்டல்கள், உணவு நிறுவனங்களில் விலை பட்டியல் வைத்திருப்பது அவசியம். தற்போது விருதுநுகர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் பட்டியல் வைத்திருப்பதில்லை. அப்படியே வைத்திருந்தாலும் அது பழைய பட்டியல் என்று கூறி புதிதாக அதிக விலை கூறி வாடிக்கையாளர்களை திக்குமுக்காட செய்கின்றனர்.தற்போது பெரிய அச்சுறுத்தலாக இருப்பது விலைவாசி உயர்வு தான். மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை பார்த்து பார்த்து செலவளிக்கும் சூழ்நிலையில் உள்ளனர். தேவையற்ற செலவுகளை தவிர்த்து அத்தியாவசியமானவற்றிற்கு மட்டும் செலவளிக்கின்றனர். ஆனால் உணவு எப்போதும் அத்தியவாசிய பட்டியலில் முதன்மை இடம் பெற்றிருப்பதால் மக்கள் அதற்கு செலவளிக்க ஒரு போதும் தயங்குவதில்லை. இதை மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் உள்ள ஓட்டல், உணவு நிறுவன உரிமையாளர்கள் துஷ்பிரயோகம் செய்யவும் தயங்குவதில்லை. நிறைய ஓட்டல்களில் விலை பட்டியல்களே இருப்பது கிடையாது. இது தொடர்பாக எந்த நகராட்சி நிர்வாகங்களும் நடவடிக்கையோ, ஆய்வோ செய்வது கிடையாது. சுகாதாரம் என்பதும் கேள்விக்குறியாக இருக்கும் பல ஓட்டல்கள் உள்ளன. உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கையும் கிடையாது. விலை பட்டியல் இல்லாத கடையில் வெளியூரில் இருந்து விருதுநகர் வந்த பயணி ஒருவர் உணவு சாப்பிட சென்று விட்டால் நிச்சயம் அதிர்ச்சி அடைந்து விடுவார். அந்தளவுக்கு இட்லி ரூ.15, தோசை ரூ.60, சப்பாத்தி செட் ரூ.40 என விலை அதிகமாக உள்ளது. ஓட்டல்களின் தரத்திற்கு ஏற்பவும், உணவு பொருட்களின் தரத்திற்கு ஏற்பவும் விலை ஏற்றம் இருப்பது சகஜம். ஆனால் சாதாரண ஓட்டல்கள் கூட இன்று பெரிய ஓட்டல்கள் விற்கும் இந்த விலைக்கு உணவை விற்கின்றனர். இதற்கு விலைவாசியை சுட்டி காட்டவும் செய்கின்றனர். உண்மையில் அவர்கள் பயன்படுத்தும் மூலப்பொருட்களுக்கு அவ்வளவு செலவு இல்லை. இருப்பினும் விலைவாசி உயர்வை சுட்டி காட்டி குளிர்காய்கின்றனர். இதனால் வெளியூரில் இருந்து விருதுநகர் வருவோர் முகம் சுளிக்கின்றனர். மதுரை போன்ற வேறு மாவட்டத்திற்கு கூட போய் சாப்பிட்டு விடலாம் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.உள்ளாட்சி நிர்வாகங்கள், உணவு பாதுகாப்புத்துறையினர் இணைந்து நகர்ப்புறங்களில், பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள கடைகள், பஜார் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் விலை பட்டியல் இருக்கிறதா என்றும், சுகாதாரம் முழுமையான அளவில் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.