கா ரியாபட்டி சூரனுாரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அக்காலத்தில் சூரனை வதம் செய்ததால் சூரனுார் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலை சுற்றி ஏராளமான இடங்கள் உள்ளன. இக்கோயில் சிதலமடைந்து, போதிய பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் வளாகம் புதர் மண்டி கிடப்பதை அறிந்து மன வேதனை அடைந்தனர். சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் கோயில் வளாகத்தை சுற்றி வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு வைக்க முன் வந்தனர். வில்வம், புங்கை, வேங்கை, மருது, செம்பருத்தி, கொய்யா, சப்போட்டா, வேம்பு என பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகின்றனர். ஓரளவிற்கு நன்கு வளர்ந்து குளிர்ச்சியாக, பசுமையாக காட்சி அளிக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, பசுமையான சூழலைக் கண்டு மனம் குளிர்ந்து செல்கின்றனர். மரக்கன்றுகளை வாங்கி பக்தர்கள் உபயம் செய்கின்றனர். பெண்கள் அமைப்பு, சிவனடியார்கள் என பல்வேறு அமைப்புகள் சார்பாக உழவாரப் பணிகள் செய்யப்படுகின்றன. கூட்டு முயற்சியாக, கருவேல மரங்கள் முளைத்து, புதர் மண்டி கிடந்த கரிசல் மண்ணை, பசுமையாக, புண்ணிய பூமியாக மாற்றி, அனைவரது கண்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் அசத்தியிருக்கின்றனர். கூட்டு முயற்சியால் சாத்தியம் தெய்வசிகாமணி, குருக்கள்: பாரம்பரியமாக திருக்கோயிலில் எங்களது குடும்பத்தினர் குருக்களாக இருந்து வருகிறோம். அவ்வளவு செல்வ செழிப்பாக இருக்கும். நான் பார்த்து வளர்ந்த இந்த மண்ணில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர்மண்டி கிடந்தன. இதனை அப்புறப்படுத்தி பசுமையாக எப்படி மாற்றுவது என்பதை சிந்தித்துக் கொண்டே இருந்தேன். பல்வேறு அமைப்பினர்கள் முன் வந்தனர். பல்வேறு மரக்கன்றுகளை நட்டு பசுமையாக மாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமூக ஆர்வலர்களின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது. பிள்ளைகளைப் போல் பாதுகாக்கிறேன் பழனிவேல், குடும்பத் தலைவி: கோயில் வளாகத்தைச் சுற்றி யாரும் வர முடியாது. இப்போது மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தண்ணி ஊற்றி பராமரிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. பிள்ளைகளைப் போல் பாதுகாத்து, தினமும் தண்ணீர் ஊற்றி கண்காணித்து வருகிறேன். என் ஆயுள் உள்ளவரை பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு முன் உதாரணமாக உருவாக்கி காட்டுவேன்.