| ADDED : நவ 23, 2025 04:38 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் முன்பு நடைபாதையை அடைத்து நிறுத்தப்படும் வாகனங்கள், ஆக்கிரமிப்பாளர்களால் பயணிகள் தினமும் அல்லளுக்கு ஆளாகி வருகின்றனர். ரயில் வரும் நேரத்தில் போலீசார் தடையற்ற போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் 10 க்கும் அதிகமான ரயில்கள் காலை முதல் இரவு வரை வந்து செல்கின்றன. ஒவ்வொரு முறையும் நுாற்றுக்கணக்கான பயணிகள் அவர்களை அழைத்து வரும் வாகனங்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவதற்கு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நுழைவு பகுதியில் இருந்து டிபி மில்ஸ் ரோடு ரவுண்டானா வரையிலான ரயில்வே பீடர் ரோடரோட்டின் 150 மீட்டர் தொலைவில் இரண்டு பக்கமும் கடைகளுக்கு வரும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கின்றனர். இது தவிர நிரந்தரமாக அப்புறப்படுத்தாமல் வாகனங்களும் பாதையை அடைத்துள்ளன. இவற்றுடன் ஆட்டோ, ஓட்டலுக்கு வரும் கார்கள் தங்கள் பங்கிற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இதனால் 30 அடி அகலம் உள்ள ரோடு 15 அடியாக சுருங்கி விடுகிறது. இதனால் பயணிகள் வெளியேறவும் உள்நுழையவும் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து விபின்: பரபரப்பான ரயில்வே ஸ்டேஷனில் காலை, மதியம், இரவு நேரங்களில் ரயில்களை பிடிக்க வேகமாக வரும் பயணிகளுக்கு இப்பகுதி ஆக்கிரமிப்பாளர்களால் தொல்லை ஏற்பட்டு வருகிறது. ஆட்டோக்கள், கார்கள், டூவீலர்களை நிறுத்தி ரோட்டை சுருக்கி விடுகின்றனர். காவலுக்கு வரும் போலீசாரும் மெயின் ரோடு ரவுண்டானா அருகே நின்று விடுகின்றனர். வாகனங்களை நிறுத்தும் டூவீலர் உரிமையாளர்களுக்கு கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தாலே பிரச்னைக்கு தீர்வு காணலாம்.