| ADDED : நவ 27, 2025 01:44 AM
விருதுநகர்: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு ரேஷன் கடை ஊழியர்களை ஈடுபடுத்துவதால் பொது விநியோக திட்டம் பாதிக்கப்படுகிறது என பொது விநியோக ஊழியர் சங்க பொருளாளர் ராமசாமி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று எஸ்.ஐ.ஆர்., படிவங்களை சேகரித்து, அவற்றை மாலை 3:00 மணிக்குள் உரிய அதிகாரிகளிடம் கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்தவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று கொடுக்கும் போது தவறாகஇருப்பதை திருத்தம் செய்து அவற்றை சரியாக பூர்த்தி செய்து கொடுக்க முடியும். படிவங்கள் நிராகரிக்கப்பட்டால் ரேஷன் ஊழியர்களுக்கும், மக்களுக்கும் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை பலருக்கு கிடைக்காமல் போனதற்கு ரேஷன் ஊழியர்கள் மீது மக்கள் கோபமடைந்தனர். பொது விநியோகத் திட்டத்தில் கைரேகை வைத்தல், எடை மிஷினோடு ப்ளுடூத் இணைத்தல் உள்பட பல்வேறு காரணங்களால் விநியோகம் செய்வதில் சிரமம் உள்ளது. தாயுமானவர் திட்டப்பணிகள், மாத இறுதியில் இருப்பு சரிபார்த்து ஒப்படைத்தல், அடுத்த மாதத்திற்கான ஒதுக்கீடு பொருட்களை இறக்கும் நடவடிக்கைகளால் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்.ஐ.ஆர். பணியையும் கொடுத்தால் பெரும் சிரமம் ஏற்படும். எனவே ரேஷன் கடை ஊழியர்களை இந்த பணியில் ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும், என்றார்.