உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம்... 27.61 சதவீதம்:ஒரு புறம் தவிப்பு மறுபுறம் சுறுசுறுப்பு

பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம்... 27.61 சதவீதம்:ஒரு புறம் தவிப்பு மறுபுறம் சுறுசுறுப்பு

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி நவ. 4 முதல் விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டசபை தொகுதிகளிலும் நடந்து வருகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 1901 ஓட்டு சாவடிகளுக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வீடுகள் தோறும் காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணியை கடந்தும் படிவங்களை வழங்கினர். இவர்களுக்கு உறுதுணையாக தி.மு.க, அ.தி.மு.க. உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் உடன் சென்றனர். இதனால் ஒவ்வொரு ஓட்டு சாவடியிலும் 95 சதவீதத்திற்கு மேல் படிவங்கள் வழங்கப்பட்ட நிலையில், இன்னும் 50 முதல் 100 வாக்காளர்களை கண்டறிந்து படிவங்கள் வழங்க முடியாத நிலை தான் உள்ளது. இந்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப வாங்கும் பணியில் ஓட்டு சாவடி அலுவலர்கள் ஈடுபட்ட போதிலும் மிகக் குறைந்த அளவு படிவங்களே மக்களிடம் இருந்து பெறப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் இன்னும் பூர்த்தி செய்யவில்லை என கூறுவதால் ஓட்டு சாவடி அலுவலர்கள் மிகுந்த பணிச்சுமைக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு உதவியாக கூடுதல் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு ஓட்டுச்சாவடி தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதால், படிவங்கள் திரும்பப்பெறும் பணி சூடு பிடித்தது. ஆனால் இதனை பதிவேற்றம் செய்ய நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், தாலுகா அலுவலகங்களில் போதிய அளவிற்கு அலுவலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பல்வேறு அரசுத் துறை ஊழியர்களும், கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால் சர்வர் பழுதாகி மிகுந்த காலதாமதம் ஏற்படுவதால் இரவு 8:00 மணியை கடந்தும் அலுவலர்கள் பணியில் ஈடுபடுவதை காண முடிகிறது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணி நிலவரப்படி ராஜபாளையம் (சதவீதத்தில்) 24.99, ஸ்ரீவில்லிபுத்தூர் 27.33, சாத்தூர் 36.16, சிவகாசி 29.21, விருதுநகர் 9. 55, அருப்புக்கோட்டை 32.32, திருச்சுழி 33.41 என ஒட்டுமொத்த அளவில் 27.61 சதவீத படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்பு அவசியம் ஒவ்வொரு ஓட்டு சாவடியிலும் தினமும் 800 படிவங்கள் பதிவேற்றம் செய்தால் மட்டுமே தேர்தல் ஆணையம் நிர்ணயத்த காலவரையறைப்படி இப்பணியை பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை இருப்பதால், ஓட்டுச்சாவடி அலுவலர்களை மீண்டும், மீண்டும் அலையவிடாமல் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை உடனடியாக வழங்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இதுவரை படிவங்கள் கிடைக்காத வாக்காளர்கள், தங்களது ஓட்டுரிமை உள்ள ஓட்டு சாவடிகளை தேடி கண்டறிந்து படிவங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுப்பது அவசியம். எதிர்க்கும் தி.மு.க., தீவிரம் தேர்தல் ஆணையத்தின் இப்பணியை ஒரு புறம் தி.மு.க., எதிர்த்தாலும், மறுபுறம் எஸ்.ஐ .ஆர். படிவங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப வாங்கி சம்பந்தப்பட்ட ஓட்டு சாவடி அலுவலர்களிடம் ஒப்படைப்பதிலும் தி.மு.க.,வினர் சுறுசுறுப்புடன் செயல்படுவதை தெருக்களில் காண முடிகிறது. இவர்களை தொடர்ந்து அ.தி.மு.க.,வினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை