UPDATED : ஜன 01, 2024 07:20 AM | ADDED : ஜன 01, 2024 05:04 AM
ராஜபாளையம்; ராஜபாளையம் அய்யனார் கோவில் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பினால் ஏற்பட்டுள்ள ரோடு சேதத்தை மாதக்கணக்கில் சரி செய்யாததால் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகின்றன.ராஜபாளையம் நகர் பகுதியில் இருந்து மலையடிவாரத்தில் அமைந்துள்ள நீர் காத்த அய்யனார் கோவில், ஆறு, மூலிகை சித்தர் மடம், அருகாமை பகுதி விவசாய தோப்பு பகுதிகளை நாடும் மக்கள் போக்குவரத்து அதிகரித்தது.இதனால் 6 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை துறையினர் மெயின் ரோட்டை அகலப்படுத்தி சீரமைத்தனர். இதனால் வாகன போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில் முடங்கியார் பாலம் அடுத்து ரோடு வளைவில் மெட்ரிக் பள்ளி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகி வருகிறது. மாதக்கணக்கில் தொடரும் இப்பிரச்சனையால் பள்ளம் பெரிதாகி எதிர்வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.மூன்று ரோடு சந்திப்பாக அமைந்த இந்த ரோட்டில் இருந்து விவசாய நிலங்களுக்கும், கணபதி சுந்தரநாச்சியார்புரம், புதுார், கிருஷ்ணாபுரம், சேத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் இணைப்பு ரோடாக இருந்து வரும் நிலையில் வாகனங்கள் சென்று மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.