| ADDED : நவ 21, 2025 04:41 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஊராட்சிகளில் செயலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் தற்போது இருக்கின்ற ஊராட்சி செயலருக்கு கூடுதல் பொறுப்பாக வேறு ஊராட்சி வழங்கப்படுவதால் அவர் இருக்கும் ஊராட்சியில் பணிகள் பாதிப்படைந்து மக்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி. இதில் 9 வார்டுகள் உள்ளன. இவற்றில் ராஜிவ் நகர், ஜெய நகர், காந்தி நகர், ஆர். கே., நகர் உள்ளிட்ட 7 க்கும் மேற்பட்ட புறநகர் பகுதிகளும் அடங்கியுள்ளது. மிகப்பெரிய ஊராட்சியாக இருப்பதால் பணிகளும் அதிகமாக உள்ளன. இங்குள்ள ஊராட்சி செயலர் பந்தல்குடி ஊராட்சிக்கும் பொறுப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளதால், அங்கும் இங்கும் அலைய வேண்டியது உள்ளது. பந்தல்குடி ஊராட்சியும் பெரிய ஊராட்சியாக உள்ளது. ஒரு சில ஊராட்சிகளில் செயலர் பதவி காலியாக இருப்பதால், வேறு ஊராட்சிகளில் இருக்கும் செயலர்களை, பொறுப்புச் செயலாளராக பணிபுரிய வேண்டியுள்ளது. கஞ்சநாயக்கன்பட்டிக்கும், பந்தல்குடிக்கும் ஊராட்சி செயலர் அலைவது தான் பெரிய வேலையாக உள்ளது. இரண்டு ஊராட்சிகளிலும் பணிகள் ஒழுங்காக நடப்பது இல்லை. கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலர் இல்லாததால் வரி கட்டுதல், குடிநீர் குழாய் பழுது, தெருவிளக்கு பழுது உள்ளிட்ட பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. ஊராட்சி செயலருக்கு உதவியாளர் இருப்பினும் முக்கியமான பணிகளுக்கு செயலர் இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. செயலர் அங்கும் இங்கும் அலைவதால் மக்களும் ஊராட்சிக்கு அலைந்த வண்ணம் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் பெரிய ஊராட்சிகளில் உள்ள செயலர்களை மாற்று பணிக்கு அனுப்பாமல் உரிய இடங்களில் பணி செய்ய அறிவுறுத்த வேண்டும்.