திருப்பூர்:அ.தி.மு.க.,வில் புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வீடு, வீடாகச் சென்று வழங்குவதன் வாயிலாக, இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க, அ.தி.மு.க., வியூகம் வகுத்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு பலத்த 'அடி' விழுந்தது. அ.தி.மு.க.,வின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக கருதப்பட்ட கொங்கு மண்டலத்தில் கூட பெரும் சரிவு தென்பட்டது.அ.தி.மு.க.,வுக்கு விழ வேண்டிய கணிசமான ஓட்டுகளை, பா.ஜ., அறுவடை செய்தது; அடுத்த சட்டசபை தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்த, கட்சி பொதுச்செயலர் பழனிசாமி, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதையடுத்து, அ.தி.மு.க.,வின் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் பணி வாயிலாக, கட்சியின் செல்வாக்கை மீட்டெடுக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''உறுப்பினர் அடையாள அட்டையை, வீடு, வீடாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பது தான், பழனிசாமியின் விருப்பம். இப்பணியை சிறப்பாக செய்தால், தனித்து போட்டியிட்டால் கூட, ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும்,'' என்றார்.கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'கட்சியின் அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ஜெயராமனின் இந்த பேச்சு, கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடு வீடாக உறுப்பினர் அட்டை வழங்குவதன் மூலம், உண்மையான உறுப்பினர்களை அடையாளம் காணவும், கட்சியினர் சுய பரிசோதனை செய்துகொள்ளவும் முடியும். தனித்து போட்டியிட்டாலும் சாதிக்கலாம் என்ற தன்னம்பிக்கையையும் இது ஏற்படுத்தும்' என்றனர்.