உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐகோர்ட் உத்தரவுப்படி பொத்துாரில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்

ஐகோர்ட் உத்தரவுப்படி பொத்துாரில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்

சென்னை : படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை, திருவள்ளூர் மாவட்டம் பொத்துாரில் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி, சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகம் அருகே, கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பெரம்பூர் பந்தர்கார்டனில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடலை, பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி, அவரது மனைவி பொற்கொடி தாக்கல் செய்த வழக்கை, விடுமுறை நாளான நேற்று காலை, நீதிபதி வி.பவானி சுப்பராயன் அவசர வழக்காக விசாரித்தார்.ஆட்சேபமில்லைமனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, “கட்சி அலுவலகத்தில் உடல் அடக்கம் செய்ய அனுமதி கோரப்பட்டது. அப்பகுதி மக்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால், விண்ணப்பத்தை மாநகராட்சி நிராகரித்துள்ளது. மறைந்த விஜயகாந்த் உடலை, கோயம்பேட்டில் அடக்கம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது,” என்றார்.தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, “உடலை அடக்கம் செய்யக்கோரும் பகுதி, வீடுகள் உள்ள நெரிசல் நிறைந்த பகுதி. அங்கு, 16 அடி சாலை மட்டுமே உள்ளது. அதனால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அரசு, 1.5 கி.மீ., தொலைவில் கண்டறிந்துள்ள, மூன்று இடங்களில் ஏதாவது ஒன்றில் அடக்கம் செய்யலாம். உடலை அடக்கம் செய்ய, 200 சதுர அடி நிலம் ஒதுக்க அரசு தயார்,” என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.பவானி சுப்பராயன் கூறியதாவது:வழக்கை ஒரு சகோதரியாக அணுகுகிறேன். சட்டப்படி குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய முடியாது; மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும். குறுகலான சாலை பகுதியில் அடக்கம் செய்தால், நினைவு நாளில் மரியாதை செலுத்த ஏராளமானோர் கூடுவர்.ஹத்ராஸில் ஏற்பட்டது போன்ற நெரிசல் சம்பவம், சட்டம் - ஒழுங்கு பிரச்னை போன்றவை ஏற்படலாம்.குடியிருப்பு நிலம்சட்ட விதிகளை மீற முடியாது. மனுதாரர் கூறிய மற்றொரு இடமும் குடியிருப்பு நிலம்; அதில் எப்படி அடக்கம் செய்ய அனுமதி தர முடியும். மேலும், பள்ளியில் உடலை தொடர்ந்து வைத்திருக்க முடியாது; பள்ளியை திறக்க வேண்டும். உடல் முன் அமர்ந்து மனுதாரர் அழுது கொண்டே இருக்க முடியாது. துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்.உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும்.கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்ய கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், வழக்கு செல்லாததாகி விட்டது.நீதிமன்றம் தன் அதிகார வரம்பை தாண்ட முடியாது. ஸ்ரீபெரும்புதுாரில் ராஜிவ் நினைவிடம் உள்ளது. அவரது உடல் டில்லியில் தகனம் செய்யப்பட்டது. அதுபோல, அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை தேர்வு செய்து, அதற்கு அனுமதி பெற்று மணி மண்டபம் கட்டலாம்.அங்கு நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தாலும், எந்த இடையூறும் இருக்காது. உடலுக்கு அரசு மரியாதை வழங்க கோரிய மனுதாரர் தரப்பு விண்ணப்பத்தின் மீது, அரசே முடிவு செய்து கொள்ளலாம்.விஜயகாந்த் உடல் அடக்கம் செய்த இடத்தின் அருகில் பெரிய சாலை வசதி உள்ளது. இவ்விவகாரத்தில் அரசு பாரபட்சம் காட்டவில்லை.இவ்வாறு நீதிபதி கூறினார்.பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 'திருவள்ளூர் மாவட்டம் பொத்துாரில், ஆம்ஸ்ட்ராங் உறவினருக்கு சொந்தமான நிலத்தில், உடலை அடக்கம் செய்ய தேவையான அனுமதி அளித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது' என, அரசு தெரிவித்துள்ளது. அங்கு உடலை அடக்கம் செய்யலாம். அதற்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும்.முடித்து வைப்புசென்னையில் உள்ள இடத்தில் நினைவிடம், மணிமண்டபம், பள்ளி அல்லது மருத்துவமனைகள் கட்டும் எண்ணம் இருந்தால், அதற்காக அரசின் அனுமதிகளை பெற்று நடவடிக்கை எடுக்கலாம். இறுதி ஊர்வலத்தை மனுதாரர் தரப்பு அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடல் இறுதி ஊர்வலம் நேற்று மாலை, 4:00 மணிக்கு துவங்கியது. பவுத்த மத முறையில், அவரது உடலை அடக்கம் செய்ய, கர்நாடகாவில் இருந்து வந்த ஏழு புத்த பிட்சுகள், இறுதி காரியங்களை முன்னின்று நடத்தினர்.நேற்று இரவு உடல் அடக்கம் நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். ஆம்ஸ்ட்ராங்க் மரணம், இறுதி ஊர்வலம் காரணமாக, வடசென்னையில் பல்வேறு பகுதிகளில் வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி