| ADDED : ஏப் 12, 2024 08:24 PM
சென்னை:நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜாவுக்கு ஆதரவாக, அம்மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர்செயல்படுவதாக, உதவி செலவின பார்வையாளர் அளித்துள்ள புகார் குறித்து, அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.நீலகிரி தொகுதி மாவட்ட தேர்தல் அலுவலராக, கலெக்டர் அருணா செயல்படுகிறார். அவர் அத்தொகுதி தி.மு.க., வேட்பாளரான, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக, உதவி செலவின பார்வையாளர் சரவணன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.இது குறித்து, சத்யபிரதா சாஹு கூறியதாவது:இச்செய்தியை பத்திரிகை வழியாக அறிந்தேன். உதவி செலவின பார்வையாளர் சரவணன், எனக்கு புகார் மனு அனுப்பியதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், நேற்று காலை வரை புகார் மனு எதுவும் வரவில்லை. எனினும், பத்திரிகை செய்தி அடிப்படையில், சரவணன் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அருணா ஆகியோரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். அத்தொகுதிக்கான செலவின பார்வையாளரும், தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அளிப்பார். தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.