சென்னை:''முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., இந்த கூட்டத்தொடரில் எடுத்த தவறான நிலைப்பாடு, எனக்கு வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.சட்டசபையில், அவர் கூறியதாவது:தி.மு.க., அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை, தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஆட்சி பொறுப்பேற்ற காலம் முதல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், நாட்டு மக்களுக்கு நல்ல பல திட்டங்களை தீட்டி வந்துள்ளேன். இதை, தமிழக மக்கள் உணர்ந்ததன் அடையாளம் தான், 100 சதவீத வெற்றி.அடுத்த இரண்டு ஆண்டுகளும், இதேபோல ஈடு இணையற்ற திட்டங்களை தந்து, 2026 சட்டசபை தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெறுவோம். முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., இந்த கூட்டத் தொடரில் எடுத்த தவறான நிலைப்பாடு எனக்கு வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது.ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பதில் சொல்ல, நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். அந்த பதிலை கேட்பதற்கு தான், அ.தி.மு.க., தயாராக இல்லை. ஒருபுறம் தேர்தல் தோல்வி; மறுபுறம் சொந்த கட்சியில் நெருக்கடி என, இரண்டுக்கும் இடையே சிக்கி தவிப்பதில் இருந்து தப்பிப்பதற்காக, சபை நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க., குந்தகம் ஏற்படுத்தியது.நாம் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, எதிர்க்கட்சியினர் சபையில் எவ்வளவு நேரம் பேசியுள்ளனர் என்பதையும், அ.தி.மு.க., ஆட்சியில் நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டது என்பதையும் ஒப்பிட்டு பார்த்தால், இரண்டு ஆட்சிகளின் ஜனநாயக பண்பு தெரியும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.