உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஞ்சோலையை டான் டீ ஏற்க முடியாது உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

மாஞ்சோலையை டான் டீ ஏற்க முடியாது உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை:'திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மாஞ்சோலை எஸ்டேட் நிர்வாகத்தை 'டான் டீ' நிறுவனம் ஏற்று நடத்த வாய்ப்பில்லை' என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மாஞ்சோலை அமுதா தாக்கல் செய்த பொதுநல மனு:மாஞ்சோலையில் 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' பி.பி.டி.சி., நிறுவன தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை செய்கிறோம். தமிழக அரசிடமிருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை வாங்கி பி.பி.டி.சி., நிர்வகிக்கிறது. குத்தகைக் காலம் 2028 பிப்., 11ல் முடிகிறது. 8,374 ஏக்கர் எஸ்டேட் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனமாக 2018ல் அரசு அறிவித்தது. அது களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் வருகிறது.குத்தகைக் காலம் முடிவதற்கு முன்பே நிறுவனம் எங்களை வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எங்களின் மறுவாழ்விற்காக இலவச வீட்டுமனை பட்டா, அரசுத்துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.மாஞ்சோலை ஜான் கென்னடி, 'மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசின் தேயிலை தோட்டக் கழகமான டான்டீ நிர்வாகம் ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, 'விருப்ப ஓய்வு திட்டத்தில் தொழிலாளர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு நிலம், பணப் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். மதுரை வைகை ராஜன், 'மாஞ்சோலையில் பாரம்பரிய மரக்கன்றுகள் நட்டு இயற்கை வனமாக மாற்ற வேண்டும். அதை வணிக நோக்கில் பொது அல்லது தனியார் துறையிடம் ஒப்படைக்க தடை விதிக்க வேண்டும்,' என மனு செய்தார்.ஏற்கனவே விசாரணையில், 'மாஞ்சோலை தேயிலை தோட்டத்தைவிட்டு தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது. அதன் நிர்வாகத்தை டான்டீ ஏற்று நடத்தும் சாத்தியக்கூறு குறித்து தமிழக அரசு, டான்டீ மற்றும் பி.பி.டி.சி.,நிர்வாகம் ஆலோசனை நடத்த வேண்டும். தொழிலாளர்களின் மறுவாழ்விற்குரிய நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: டான்டீ நிறுவனம் நஷ்டத்தில் செயல்படுகிறது. அது மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த வாய்ப்பில்லை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை வணிக நோக்கில் பயன்படுத்த முடியாது. மாஞ்சோலையில் பணியாற்றிய 559 தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை, அந்நிறுவனம் அறிவித்தது. செப்டம்பருக்குள் ஓய்வு பெறவுள்ள தொழிலாளர்களை தவிர்த்து, 536 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.தொழிலாளர்கள் திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் குடியேற விரும்புவோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதோடு, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும்.அரசின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடில்லா தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு ஒதுக்கப்படும். தொழிலாளர்களுக்கு சுய தொழில் துவங்க கடன், மானியம், வட்டி சலுகை வழங்கப்படும். இவ்வாறு அறிக்கை தாக்கல் செய்தது. நீதிபதிகள் ஆக.,7க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்