| ADDED : ஆக 21, 2024 08:21 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சி 2022லிருந்து 2024 வரை 3 ஆண்டுகளாக மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாததால் ரூ.9.50 கோடி பாக்கி உள்ளது. இதை வசூலிப்பதற்காக மின்வாரியத்தினர் மாநகராட்சி அலுவலகத்திற்கு டிமேன்ட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் 48 வார்டுகளிலும் தெரு விளக்குகள்,தண்ணீர் பம்பிங் செய்வது, ஆத்துார் அணையிலிருந்து தண்ணீரை நகருக்கு கொண்டு வருவது,பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவது,எல்லா தெருக்களிலும் தண்ணீர் சப்ளை செய்வது,மினி போர்வெல்களிலிருந்து தண்ணீர் எடுப்பது,பூங்காக்கள்,வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், மாநகராட்சிக்கு சொந்தமான அலுவலகங்கள் என மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் உள்ள மின் பயன்பாடுகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் மின் வாரியத்திற்கு வரி செலுத்த வேண்டும். 2022 லிருந்து 2024 வரை 3 ஆண்டுகளாக மின்வரி முறையாக செலுத்தவில்லை.இதனால் வரி பாக்கி ரூ.9.50கோடியை எட்டியுள்ளது. மின்வரியை செலுத்தாதவர்களை கணக்கிடும் பணியில் மின்வாரியத்தினர் ஈடுபட்டபோது இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மின் வரி பாக்கியை உடனே செலுத்தவேண்டும் என பல முறை அறிவுறுத்தியுள்ளனர். இருந்தபோதிலும் வரி பாக்கியை செலுத்த மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மின்வாரியத்தினர் டிமேன்ட் நோட்டீஸை மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கிவிரைவில் வரிபாக்கியை செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சியில் ஏற்கனவேரூ.4.66 கோடியை மாநகராட்சி அலுவலர் சரவணன்,கையாடல் செய்த விவகாரத்தில் மக்கள் வரிப்பணத்தை மீட்க நிர்வாகத்தினர்போராடுகின்றனர். தற்போது ரூ.9.50 கோடி மின்வாரியத்திற்கு பாக்கி செலுத்த வேண்டிய விவகாரம் மேலும் அவர்களுக்கு தலைவலியைஏற்படுத்தியுள்ளது. இதனிடையே திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர்,ரவிச்சந்திரன் கூறியதாவது: திண்டுக்கல் மா நகராட்சியில் முறையாக மின்வரி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.