சென்னை:'ஓராண்டுக்குள் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடிக்காமல், எத்தனை வழக்குகள் உள்ளன?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தலைமை செயலருக்கு உத்தரவிட்டு உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் சார் - பதிவாளராக பணியாற்றிய பொன் பாண்டியன், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை 'சஸ்பெண்ட்' செய்து, பதிவுத்துறை துணைத் தலைவர், 2019ல் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பொன் பாண்டியன் மனு தாக்கல் செய்தார். நீண்ட காலத்துக்கு தற்காலிக பணிநீக்கத்தில் வைத்திருக்க முடியாது எனக்கூறி, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணி வழங்க, தனி நீதிபதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, பதிவுத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. 'அரசு உத்தரவின்படி, ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்காமல், 5 ஆண்டுகளாக தற்காலிக பணிநீக்கத்தில் வைத்து, 75 சதவீத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது; குறித்த காலத்தில், விசாரணையை முடிக்காத அதிகாரியிடம் வசூலிக்க வேண்டும்' என, முதல் பெஞ்ச் தெரிவித்தது. அரசு உத்தரவையும் அமல்படுத்தாமல், நீதிமன்ற உத்தரவையும் அமல்படுத்தாமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்த முதல் பெஞ்ச், ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை, குறித்த காலத்துக்குள் முடிக்காமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து, தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.