உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி நாணய விழா ஏற்படுத்திய பாதிப்பு துாங்க மறுக்கும் தி.மு.க., கூட்டணி தலைவர்கள்!

கருணாநிதி நாணய விழா ஏற்படுத்திய பாதிப்பு துாங்க மறுக்கும் தி.மு.க., கூட்டணி தலைவர்கள்!

சென்னை:கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில், தி.மு.க., -- பா.ஜ., காட்டிய நெருக்கத்தால், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு இன்னும் தொடர்கிறது.கடந்த 2014ல் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்தது முதல், தி.மு.க.,வும், பா.ஜ.,வும் எதிரெதிராக செயல்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சியாக இருக்கும்போது, பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம், சமூக வலைதளங்களில், 'கோபேக் மோடி' என்ற பிரசாரத்தை தி.மு.க., மேற்கொண்டது.தமிழக மக்களிடமிருந்து அதிக வரி வருவாய் பெறும் மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என, மோடி அரசுக்கு எதிராக, தி.மு.க., தீவிர பிரசாரம் செய்தது. இப்படி தீவிர எதிர்ப்பு மனநிலையில் இருந்த இரு கட்சிகளும், கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் காட்டிய நெருக்கம், தமிழக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.இதை கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'தொட்டுப் பார், வெட்டிப் பார், ஹிந்தி தெரியாது போடா என்றெல்லாம் மத்திய அரசை பார்த்து வறட்டு சவால் விட்ட தி.மு.க., இன்று பா.ஜ.,வுடன் ரகசிய உறவு வைத்துள்ளது' என்றார்.அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'கருணாநிதியை புகழ்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பா.ஜ.,வுடன் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியம், தி.மு.க.,வுக்கு இல்லை' என்றார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும், 'கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டதில் அரசியல் எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சி' என்றனர்.ஆனாலும், இது பற்றிய சலசலப்பு தி.மு.க., கூட்டணிக்குள் ஓயவில்லை. * மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் பாலகிருஷ்ணன்:பா.ஜ.,வை எதிர்ப்பதால்தான் தி.மு.க.,வுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி வைத்துள்ளது. இது தி.மு.க.,வுக்கும் நன்கு தெரியும். எனவே, தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி ஏற்பட வாய்ப்பே இல்லை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் தொடர்ந்து மத்திய பா.ஜ., அரசு புறக்கணித்து வருகிறது. எனவே, தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முக்கிய கட்சிகள் எடுக்காது.* தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவை, அரசு நிகழ்வாக காங்கிரஸ் பார்க்கிறது. இதனால்தான் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். மதவாத சக்திகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார். பா.ஜ., எதிர்ப்பு என்பது, தி.மு.க.,வின் பிரதான கொள்கை. * விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் ரவிகுமார்:கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் அரசியல் இல்லை என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். எனது கருத்தும் இதுதான். எங்கள் கட்சி நிலைப்பாடும் இதுதான். மதவாத பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகளுக்குதான் தமிழகத்தில் வெற்றி கிடைக்கிறது. பா.ஜ., எதிர்ப்புதான் தி.மு.க., கூட்டணிக்கு தொடர் வெற்றிகளை அளித்து வருகிறது. இந்திய கம்யூ., கட்சி மாநிலச்செயலர் முத்தரசன்:கருணாநிதி நூற்றாண்டு நிறைவை ஒட்டி நாணயம் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கருணாநிதியை பாராட்டிப் பேசினார். நடந்தது அரசு நிகழ்ச்சி. அரசியல் நிகழ்ச்சி அல்ல. அதனால் இதில் அரசியல் எதுவும் இல்லை. மற்றபடி, இந்த நிகழ்ச்சியால் தி.மு.க., கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. எனவே, சட்டசபை தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் நிலையில் பா.ஜ.,வுக்கு இணக்கமாக, தி.மு.க, எப்படி செல்ல முடியும்? மத்தியில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.,வுக்கு, மாநில கட்சிகளின் தயவு தேவைப்படலாம். அதற்காக அவர்கள் வலை வீசலாம். ஆனால், பா.ஜ.,வுடன் நெருங்க வேண்டிய தேவை தி.மு.க.,வுக்கு இல்லை. அ.தி.மு.க., தங்கள் அரசியலுக்காக இதை பெரிதுபடுத்தி வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Swaminathan L
ஆக 22, 2024 12:45

இந்த விழா அரசு விழா. இரண்டு அரசுகளும் கூட்டணியாக நடத்திய விழா. இனிமேல், பாராளுமன்றத்தில் எனன்டிஏ கூட்டணி அரசுக்குச் சாதகமாக தமிழக அரசு தான் செயல்படுமே தவிர திமுக அல்ல.ஏனெனில், அந்த அவைகளில் உள்ள உறுப்பினர்கள் கட்சி நலனுக்காக அரசியல் செய்பவர்கள் அல்ல. மாநிலத்தின் நலனுக்காக மத்திய அரசுடன் அரசியல் செய்பவர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் எல்லாம் சரியாகி விட்டது புரியும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை