சென்னை:லோக்சபா தேர்தலின் போது, அத்தியாவசிய பணியில் இருக்கும் அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு தபால் ஓட்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், 1.30 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்பப் பிரிவில் மட்டும் 70 சதவீதம் பேர் உள்ளனர். விரைவு போக்குவரத்துக் கழகத்தில், 1,000க்கும் மேற்பட்ட தொலைதுார விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிகாலை 5:00 மணிக்கு பணிக்கு செல்வதால், ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுனர், நடத்துனர் ஓட்டளிக்க முடிவதில்லை.பணிமனைகளில் பராமரிப்பு பிரிவு மற்றும் அலுவலர்களுக்கு ஓட்டளிக்க, ஒரு மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. நீண்ட துார விரைவு பஸ்களில் பணியாற்றும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இந்த ஒரு மணி நேரம் போதாது. எனவே, அத்தியாவசிய பணியில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு தபால் ஓட்டு வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர்கள் கூறுகையில், 'அரசு ஊழியர்கள் போல, தபால் ஓட்டளிக்கும் வசதி வேண்டும். லோக்சபா தேர்தலிலாவது ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.இதுகுறித்து, விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, 'நீண்ட துாரம் செல்லும் விரைவு பஸ்களில் பணியில் இருக்கும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தபால் ஓட்டு வழங்கக்கோரி, கலெக்டர்கள் வாயிலாக, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளோம்' என்றனர்.