| ADDED : ஏப் 29, 2024 06:20 AM
சென்னை: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், குப்பைக்கு தீ வைக்க வேண்டாம்; சாலை ஓரங்களில் சிகரெட் மற்றும் பீடி துண்டுகளை வீச வேண்டாம்' என, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.கோடை காலம் என்பதால், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வீடுகளில் வைக்க வேண்டாம்.குடிசை வீடுகளின் அருகே, குப்பைக்கு தீ வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சாலைகளில் மட்டுமல்ல; வயல் வெளிகளில் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மரத்தடி நிழல்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும், புகையும் பீடி துண்டுகளை சாலையோரம் வீசி எறியும் வழிபோக்கர்களால், காய்ந்த புல்வெளிகள் தீப்பிடித்து, காற்றின் போக்கில் அதிவேகமாக தீ பரவுகிறது. சாலை ஓர காய்ந்த புல்வெளி அருகே எரியும் தீக்குச்சி, பீடி, சிகரெட் துண்டுகளை வீச வேண்டாம். குப்பைக்கு தீ வைக்க வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.