சென்னை: நீண்ட காலமாக குடியிருப்பு பயன்பாட்டில் உள்ள நான்கு நகரங்கள், பக்கவாட்டு இடைவெளி யின்றி வீடுகள் கட்டும் வகையில், தொடர் கட்டட பகுதிகளாக வரையறுக்கப்படுகின்றன.தமிழகத்தில், நகர், ஊரமைப்பு சட்டப்படி வகுக்கப்பட்ட பொது கட்டட விதிகளுக்கு உட்பட்டே, கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். இதன்படி, ஒவ்வொரு மனையிலும், எந்த அளவுக்கு கட்டடம் கட்ட வேண்டும் என்பது வரையறுக்கப்பட்டு உள்ளது. மேலும், மனையில் முன், பின், பக்கவாட்டில் உரிய அளவுக்கு காலியிடம் விட்டு தான் கட்டடம் கட்ட வேண்டும். ஆனால், சில இடங்களில் நீண்ட காலமாக ஒரே மாதிரியான குடியிருப்புகளே கட்டப்பட்டு வருவதால், பக்கவாட்டு காலியிடம் விட முடிவதில்லை. குறைந்த பரப்பளவு மனைகள் உள்ள இதுபோன்ற இடங்களை மக்கள் நலன் கருதி, தொடர் கட்டட பகுதிகளாக வரையறுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வகையில், சென்னையில் மட்டும் தான் தொடர் கட்டட பகுதிகள் பயன்பாட்டில் உள்ளன. தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், இதை விரிவுபடுத்த அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில், ராஜபாளையம் முழுமை திட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகள், தொடர் கட்டட பகுதிகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன. இதற்கு அரசின் ஒப்புதல் கிடைத்த நிலையில், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, வேலுார், சேலம் ஆகிய நகரங்களின் முழுமை திட்ட ஆவணங்களில், தொடர் கட்டட பகுதிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதற்கு அரசின் ஒப்புதல் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாரம்பரிய சிறப்புள்ள நகரங்களில், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை தொடர் கட்டட பகுதிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, கோவை, காரைக்குடி, நாகர்கோவில், புதுக்கோட்டை நகரங்களின் முழுமை திட்டத்தில், தொடர் கட்டட பகுதிகள் சேர்க்கப்பட உள்ளன. இதற்கான ஆவணங்கள் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனால், தொடர் கட்டட பகுதிகளில், அதிக எண்ணிக்கையில் வீடுகள் கட்ட வாய்ப்பு ஏற்படும். விதிமீறல் புகார்கள் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.