சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, பென்னாகரம், நீலகிரி ஆதார் எஸ்டேட் பகுதியில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. மாநில அளவில், 37 இடங்களில் கோடை மழை பதிவாகியுள்ளது.நேற்று மாலை நிலவரப் படி, மாநிலத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில், 44 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கோவை, கடலுார், பரங்கிப்பேட்டை, தர்மபுரி, நாகை, 38; சென்னை மீனம்பாக்கம், 39; மதுரை நகரம், தஞ்சாவூர், 40; சேலம், பாளையங்கோட்டை, 41; திருப்பத்துார், திருச்சி, திருத்தணி, மதுரை விமான நிலையம், வேலுார், 42; ஈரோடு, 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் வாட்டியது. கொடைக்கானல், 23; ஊட்டி, குன்னுார், 26; பாம்பன், தொண்டி, புதுச்சேரி, 36; நுங்கம்பாக்கம், கன்னியாகுமரி, காரைக்கால், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், சில மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும்.நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், வரும், 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.வட மாவட்டங்களில், சில இடங்களில் இன்று வெப்ப அலை வீசும். பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். சில இடங்களில், இடி, மின்னலுடன் திடீர் மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையில், 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.