சென்னை : 'பழனிசாமியிடம் நான் எந்த கோரிக்கையும் விடுக்காத நிலையில், என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என அவர் கூறுவது ஆணவத்தின் உச்சம்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:அ.தி.மு.க.,வுக்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த அளவுக்கு விசுவாசமாக இருந்தேன் என்பதை, ஜெயலலிதா பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.எனவே, அதைப் பற்றி பேச, 10 தோல்வி பழனிசாமிக்கு தகுதியில்லை. சுயநலத்துக்காக பல துரோகங்களை செய்த பழனிசாமி, என் விசுவாசம் குறித்து பேச அருகதையற்றவர்.மக்கள் ஆதரவுமூன்று சதவீதம் ஆதரவு இருந்த எனக்கு ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் பதவி தந்ததாகக் கூறியுள்ளார்.நான் 2017ல் தர்மயுத்தம் நடத்திய காலத்தில், எனக்கு, 42 சதவீதம் மக்கள் ஆதரவு இருந்தது. நான் பழனிசாமியிடம், ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் பதவி கேட்கவில்லை.கட்சியின் மூத்த விசுவாசிகளான வேலுமணி, தங்கமணி ஆகியோர் என்னை சந்தித்து, 'நாம் ஒன்று சேர்ந்தால்தான், அ.தி.மு.க., வலுப்பெறும்' என்றனர். கட்சி நலன் கருதி, அவர்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டேன். நான் போய் பழனிசாமியிடம் எந்த பதவியையும் கேட்கவில்லை; இனியும் கேட்க மாட்டேன்.பழனிசாமி தான் முதல்வர் பதவியை காப்பாற்ற துாது விட்டார். அவர் பதவி வெறி பிடித்தவர், சுயநலவாதி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். என்னிடம் துாது வந்தவர்கள், கட்சிக்கு நானும், ஆட்சிக்கு பழனிசாமியும் எனக் கூறினர்; நான் ஒப்புக் கொண்டேன். அதற்கு மாறாக, கையெழுத்திடும் அதிகாரம் உடைய இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தனக்கு தரப்பட வேண்டும் என, பழனிசாமி நிபந்தனை விதித்தார். அ.தி.மு.க., நலன் கருதி, அதை ஏற்றுக் கொண்டேன். இது கட்சி மீது, எனக்குள்ள விசுவாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. 'ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது' என்று நான் சொன்னதற்கு காரணம், மக்களுக்கு சந்தேகம் இருந்ததால்தான். நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் ஆஜராகி, என் விளக்கத்தை அளித்தேன். விசாரணை ஆணையம் குறித்து கருத்து தெரிவிக்கும் பழனிசாமி, கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு குறித்து வாய் திறக்க மறுக்கிறார். இது, மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆணவத்தின் உச்சம்கட்சியில் இரட்டைத் தலைமை இருந்தபோது, 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 19.39 சதவீதம், கூட்டணி 31.05 சதவீத ஓட்டுகளை பெற்றது.ஒற்றைத் தலைமை வந்த பின், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 34 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தென் மாவட்டங்களில் உள்ள ஒன்பது தொகுதிகளில், அ.தி.மு.க., 30 லட்சத்துக்கும் மேல் ஓட்டுகளை பெற்றது. இந்த தேர்தலில் அது 15 லட்சமாக குறைந்துவிட்டது. இதற்கு காரணம் பழனிசாமி மட்டும்தான்.அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும். கட்சி இணைவதற்கு நான் எந்த தியாகத்தையும் செய்ய தயார். பழனிசாமி எந்த தியாகத்தையும் செய்ய தயாரா என்பதுதான் என் கேள்வி.பழனிசாமியிடம் நான் எந்த கோரிக்கையும் விடுக்காத நிலையில், என்னை சேர்த்துக் கொள்ள மாட்டேன் என, அவர் சொல்வது ஆணவத்தின் உச்சம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.