| ADDED : ஆக 17, 2024 07:58 PM
துாத்துக்குடி:துாத்துக்குடியில் எம்.பி.,யான கனிமொழி அளித்த பேட்டி: தமிழகத்தில் டாக்டர்கள் வேலைநிறுத்தம் குறித்து, அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பின், நல்ல தீர்வு ஏற்படுத்தப்படும். மேற்கு வங்க மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழப்பு கொடூரமானதுதான். இதுகுறித்து, என்னுடைய வருத்தத்தையும் கண்டனத்தையும் சமூக வலைதளம் வாயிலாக உடனடியாக பதிவிட்டேன். ஆனால், அது குறித்து எதும் தெரிந்து கொள்ளாமல், பா.ஜ.,வைச் சேர்ந்த நடிகை குஷ்பு என்னை விமர்சித்துள்ளார். கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவிக்காக எந்தக் கருத்து சொல்லாதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். அது தெரியாமல் நடிகை குஷ்பு பேசுகிறார். அவர், அடுத்தவர் மீது குற்றம்சாட்டுவதற்கு முன், தெரிந்து கொண்டு பேச வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட துாத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை. அதில் கடும் சட்ட சிக்கல் இருக்கிறது. அதனால் தான், அவர்களை உடனடியாக விடுவிப்பது கடினமாக இருக்கிறது. இருந்த போதும், அதற்காக தொடர்ந்து முயற்சிக்கிறோம். முதல்வர் வாயிலாகவும் முயற்சிக்கப்படுகிறது. மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடமும் பேசி வருகிறோம். விரைவில் அவர்கள் நல்லபடியாக விடுவிக்கப்படுவர். இலங்கை பார்லிமென்டில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு, பிடிபடும் அந்நிய நாட்டு படகுகள், தேசிய மயமாக்கப்பட்டுவிடுவதால், சிக்கிய நம் மீனவர்களின் படகுகளை மீட்பதில் சிரமம் உள்ளது. அந்த சட்டத்தை மாற்றுவதற்கு ஏதாவது வழிவகை செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான், நம் நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கையிடம் சிக்கினால், அதை எளிதாக விடுவிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.