உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சென்னை:''தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி துவங்கிய நாளில் இருந்து, எங்கு பார்த்தாலும் ஊழல் நிலவுகிறது. சட்டம் - ஒழுங்கு கவலைக்குரியதாக உள்ளது. போதைப் பொருள்கடத்தல் கும்பல் தலைவர்கள் தமிழகத்தில் இருக்கின்றனர் என்பதும் அதிர்ச்சியாக உள்ளது,'' என, பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி, 'நமோ செயலி' வாயிலாக, தமிழக பா.ஜ., தொண்டர்களுடன், 'என் பூத் வலிமையான பூத்' என்ற நிகழ்ச்சியில் உரையாடினார்.அதற்கு முன்னதாக, 'தமிழகத்தில் உள்ள நம் தொண்டர்கள், நம் கட்சியின் நல்லாட்சி குறித்து, மாநிலம் முழுதும் திறம்பட பிரசாரம் செய்வதும், மக்கள் மத்தியில் பணியாற்றுவதும் பாராட்டுக்கு உரியது.'தி.மு.க.,வின் தவறான ஆட்சியால், தமிழக மக்கள் விரக்தி அடைந்து, பா.ஜ.,வை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை' என தன், 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மிகப்பெரிய பலம்

நேற்று மாலையில், பா.ஜ., தொண்டர்களுடன் பிரதமர் மோடி பேசியதாவது:ஏற்றத்தாழ்வு இல்லாமல், சமத்துவமான உணர்வுதான் நம் கட்சியின் மிகப்பெரிய பலம். நீங்கள் எல்லாம் தமிழகத்தில் மிக சிறப்பாக, நீண்ட காலமாக உழைத்து வருகிறீர்கள். உங்கள் உழைப்பு, கட்சியின் வளர்ச்சியை மிக நீண்ட பாதைக்கு அழைத்துச் செல்கிறது. தேர்தலுக்கு வேட்பாளர்கள் தயாராகி விட்டனர். தமிழகத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அங்கு மக்கள் அளித்த வரவேற்பையும், தானாக முன்வந்து அன்பு செலுத்தியதையும் பார்த்து வியந்து போனேன். நம் அரசு பெண்களை முன்னிறுத்தி, பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. குடிநீர் இணைப்பு, காஸ் சிலிண்டர் இணைப்பு, இலவச கழிப்பறை என, நம் திட்டங்களால் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை பாதுகாக்க, 2 லட்சம் டன் கொள்ளளவில் கிடங்குகள் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. தமிழனின் பெருமையை கொண்டாட, காசி தமிழ்ச் சங்கமம் நடத்தப்பட்டது. பெண்களை முன்னிறுத்தி, நாட்டின் வளர்ச்சியைக் கொண்டு செல்வதே அரசின் நோக்கம். 'பூத்' கமிட்டியில் உள்ளவர்கள், ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட குடும்பத்தினரை தினமும் சந்தித்து, பழக வேண்டும். அரசின் திட்டங்கள் வந்திருக்கிறதா என்று பார்த்து, உதவ வேண்டும். போதைப் பொருள், நம் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்து விடும்.

அதிர்ச்சி தகவல்

வருங்கால தலைமுறைக்கு, அது வரும் முன் தடுக்க வேண்டும். எனக்கு அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இருப்பது என்னவெனில், சமீபத்தில் போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது. அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மாபியா கும்பலின் மூல ஆதாரம், போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள், தமிழகத்தில் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வந்தது. நம் குடும்பத்தையும், வருங்கால தலைமுறையையும் காக்க, அதன் மூல ஆதாரத்தை வேறோடு அழிக்க வேண்டும்.அப்போதுதான் போதைப் பொருளில் இருந்து வெளியே வர முடியும். அதற்கான தொடர் நடவடிக்கையில், நம் அரசு ஈடுபட்டுள்ளது. உலகின் மூத்தமொழி தமிழ் என்பது, உலகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியப்படுத்த வேண்டும். என் அடிமனதின் ஆழத்தில், தமிழில் பேச முடியவில்லையே, உலகின் மூத்த மொழியான தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தப்படுகிறேன். எனக்கு தமிழ் தாய்மொழியாக கிடைக்காதது வருத்தம். தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், தமிழகத்தில் ஆட்சியை துவங்கிய நாளில் இருந்து மக்களுக்கு ஆதரவாக இல்லாமல், குழப்பத்திலும், ஆபத்தை நோக்கியும் கொண்டு செல்வது போல உள்ளது. எங்கு பார்த்தாலும் ஊழல் நிலவுகிறது.தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கும் கவலைக்குரியதாக உள்ளது. மக்களுக்கு புதிய புதிய பிரச்னைகளை உருவாக்குவது தான் அரசின் வேலையாக உள்ளது.அக்கட்சியின் உள்ளவர்களே போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கு எல்லாம் இவர்கள் காரணம் என்று நினைக்கும்போது கவலையாக உள்ளது. தி.மு.க., ஆட்சியில் நடக்கும் தவறுகள், அவலங்களை எல்லாம் கிராமம், பூத்தில் உள்ள ஒவ்வொரு மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.திருவாரூர், நாமக்கல், கன்னியாகுமரி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு, அதற்கு பிரதமர் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி