உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆறுகள் இணைப்புத் திட்டப்பணி முன்னேற்ற அறிக்கை தேவை: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆறுகள் இணைப்புத் திட்டப்பணி முன்னேற்ற அறிக்கை தேவை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : தமிழகத்தில் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை ஆறு - குண்டாறு இணைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.புதுக்கோட்டை முருகேசன் தாக்கல் செய்த பொதுநல மனு:காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை ஆறு - குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக வறட்சி நிலவுகிறது. 2018 ல் வெள்ளப் பெருக்கால் முக்கொம்பில் கொள்ளிடம் பாலம் உடைந்தது. மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க கொள்ளிடம், காவிரி உபரி நீரை அக்னி ஆறு, தெற்கு வெள்ளாறுடன் இணைக்க வேண்டும். ஆறுகள் இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக மாயனுார் கதவணையில் இருந்து உபரி நீரை திருப்பிவிட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.தமிழக நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் மன்மதன் காணொலியில் ஆஜராகி கூறியதாவது:கரூரில் 92 சதவீதம், திருச்சி 73, புதுக்கோட்டை மாவட்டத்தில் 64 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளது. இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பணியில் 92 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சில இடங்களில் கால்வாய் அமைப்பதற்கான வழித்தடத்தை மாற்றியமைக்குமாறும், சிலர் கூடுதலாக இழப்பீடும் கோருகின்றனர். அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.நீதிபதிகள்: இத்திட்டத்திற்கு 2024-25 ல் அரசு ரூ.418.65 கோடி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். இத்திட்டத்தால் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பயனடையும். திட்டப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவ.4 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை