உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணைக்கு தடையில்லை

செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணைக்கு தடையில்லை

சென்னை,:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கில், சாட்சிகள் விசாரணையை தொடரலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். போக்குவரத்துத் துறையில் பணி நியமனம் பெற்று தருவதாக, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு ஜூனில் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில், அமலாக்கத்துறை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவருக்கு எதிராக குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு, சாட்சி விசாரணை துவங்கி விட்டதாக, அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரியதை தொடர்ந்து, விசாரணையை, வரும் 28க்கு தள்ளிவைத்த நீதிபதிகள், சாட்சிகள் விசாரணையை தொடர அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
ஆக 23, 2024 19:01

இந்த வழக்கில் முக்கிய மற்றுஒரு குற்றவாளி செந்தில் பாலாஜியின் சகோதரர்.. இவரை கண்டுபிடிக்க இயலவில்லைஎன்பது நகைப்புரியது. கேவலமானது. அரசின் நிர்வாக செயலாளரும் காவல் துறை உயர் அதிகாரியை கூண்டில் நிற்கவைத்து விசாரணை செய்யவேண்டும். தங்களின் இயலாமையை நீதிமன்றத்தில் கூறவேண்டும். அதன் மீது நீதிமன்றம் தீர்ப்பினை அரசுக்கு தெரிவிக்கவேண்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை