| ADDED : ஏப் 04, 2024 09:13 PM
சென்னை:பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.பட்டதாரி அறிவியல் ஆசிரியர், பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது:பத்தாம் வகுப்பு அறிவியல் பாட வினாத்தாள் முறை சரியாக வரையறுக்கப்படவில்லை. மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் மிகவும் சவாலாக உள்ளது என்பதை, தேர்வுத்துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்களிடம், பல முறை தெரிவித்து விட்டோம்.ஆனால், வினாத்தாள் முறையை இன்னும் மாற்றாமல், கமிட்டி அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதற்குள், ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் வந்து, மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.ஒவ்வொரு மாணவருக்கும், 10ம் வகுப்பு தேர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது. அதற்கு கூட சிரமப்படும் அளவுக்கு, அறிவியல் வினாத்தாளை கடினமாக தயாரிப்பது மிகவும் கவலைக்குரியது. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், வகுப்பறையில் ஆசிரியர்கள் குறிப்பிட்டு பயிற்சி அளித்த எந்த வினாவும், இந்த ஆண்டு வினாத்தாளில் இடம் பெறவில்லை. இது வேண்டுமென்றே, எதிர்மறை நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட வினாத்தாளாக உள்ளது. இந்த ஆண்டு அறிவியல் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சியை பாதிக்காமல், மதிப்பீடுகளில் சலுகை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.