சென்னை: ஓட்டுப்பதிவு சதவீதத்தை அறிவிப்பதில் ஏற்பட்ட குழப்பத்திற்கும், வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக வந்த புகார்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறியதாவது:ஓட்டுப்பதிவு அன்று, மொபைல் போன் செயலி வழியாக ஓட்டுப்பதிவு சதவீதம் விபரங்களை கேட்டோம். அதில் ஒரு சிலர் முழு விபரத்தை பதிவிடவில்லை. செயலியில் வந்த தகவல் அடிப்படையில், ஓட்டுப்பதிவு சதவீதம் முதலில் தெரிவிக்கப்பட்டது. பொறுப்பு யார்?
அதன்பின், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கையெழுத்திட்டு கொடுத்த படிவத்தில் இருந்த ஓட்டுப்பதிவு விபரங்களை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சேகரித்து, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தார். இப்பணியை இரவு 11:59 மணிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, துாத்துக்குடிதவிர அனைத்து மாவட்டஉதவி தேர்தல் நடத்தும்அலுவலர்களும் பதிவேற்றம் செய்து விட்டனர்.மறுநாள் ஓட்டுப்பதிவு விபரங்களை, தேர்தல் பார்வையாளர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆய்வு செய்தனர். அதன்பின், இறுதி ஓட்டுப்பதிவு விபரம் வெளியிடப்பட்டது. இந்த மொபைல் போன் செயலியை, 2019 லோக்சபா தேர்தலிலும் பயன்படுத்தினோம். இதில் கட்டாயம் ஓட்டுப்பதிவு விபரத்தை பதிவிட வேண்டும் என, ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரை கட்டாயப்படுத்த முடியாது.ஏனெனில் ஓட்டுச்சாவடியில் வேறு பணி இருந்தால், அவர்கள் பதிவேற்றம் செய்ய முடியாது. தேர்தலை பொறுத்தவரை, ஓட்டுப்பதிவுக்கு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் தான் பொறுப்பு. அவர்கள் முழுமையாக பணி முடித்து, ஆய்வு செய்த பின் தான், முழு விபரத்தை வெளியிடுவர்.கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 69 சதவீதம் ஓட்டுப்பதிவு என தெரிவித்தோம். இறுதியில், 72 சதவீதம் ஓட்டுப்பதிவு என தெரிவிக்கப்பட்டது. இம்முறை முதலில் சொன்னதை விட குறைந்துள்ளது. பெயர் நீக்கம்
வாக்காளர்கள் பெயர் பல இடங்களில் நீக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. ஒவ்வொரு நீக்கத்துக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து, கடந்த அக்டோபரில் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. கட்சிகளுக்கு பட்டியல் பிரதி வழங்கப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் விபரம் அதில் இருந்தன. மாவட்ட, மாநில அளவில் கட்சிகள் கூட்டம் நடத்தியும் விபரம் தெரிவிக்கப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட போதும் கூட்டம் நடத்தி கட்சிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெயர் விடுபட்டவர்கள், மார்ச் 23 வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது.வாக்காளர் பட்டியலுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரே பொறுப்பு. பெயர் விடுபட்டால், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர், ஓட்டுச் சாவடி அலுவலர், வாக்காளர், கட்சியினர் என எல்லாருக்குமே பொறுப்பு உள்ளது.ஓட்டுச் சாவடி அலுவலர் ஆய்வுக்கு செல்லும்போது, வாக்காளர் அங்கு குடியிருக்காவிட்டால், பெயர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. இடம் மாறி செல்வதாக வாக்காளர் விண்ணப்பம் அளித்திருந்தால் அல்லது இறந்திருந்தால் பெயர் நீக்கப்படும். வழக்கு
எனவே, ஏராளமான பெயர் நீக்கப்பட்டிருப்பதாக முன்பே தெரிவித்திருந்தால் உடனே நடவடிக்கை எடுத்திருக்க முடியும். தற்போது புகார் வந்தால் விசாரிக்கப்படும். வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் ஆதார் எண்ணை இணைத்தால், இது போன்ற குளறுபடிகளை தவிர்க்கலாம். ஆனால், நீதிமன்ற வழக்கு காரணமாக, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்காமல் உள்ளது.இவ்வாறு சாஹு கூறினார்.