சென்னை: மயிலாடுதுறையில் நடமாடுவதாக கூறப்பட்ட சிறுத்தை, அரியலுார் வழியாக தற்போது பெரம்பலுார் மாவட்ட எல்லை கிராமங்களுக்கு நகர்ந்துள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர். தமிழகத்தில் அடர்ந்த வனப்பகுதிகளில் தான் சிறுத்தைகள் வசிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு மாறாக, அடர்ந்த வனப்பகுதிகள் எதுவும் இல்லாத மயிலாடுதுறை மாவட்டத்தின் சில கிராமங்களில், சிறுத்தை நடமாட்டம் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாடுவது, ஏப்., 2ல் வனத்துறைக்கு தெரிய வந்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகள், எச்சம் ஆகியவற்றின் அடிப்படையில், சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து, முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அதிகாரிகளை வரவழைத்து சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மேற்பார்வையில், சிறுத்தையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதில், ஏற்கனவே நடமாட்டம் பதிவான இடங்களில், மீண்டும் சிறுத்தை வந்ததற்கான அறிகுறி தென்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அடுத்தடுத்த பகுதிகளில் வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். இதில் அந்த சிறுத்தை, அரியலுார் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில கிராமங்கள் வழியாகச் சென்றது உறுதியானது. இதையடுத்து, சிறுத்தையின் காலடி தடங்கள், எச்சங்கள் அடிப்படையில் அதன் பாதையை வனத்துறையினர் பின்தொடர்ந்து வருகின்றனர். இடம் மாறுது இது குறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுவரை மயிலாடுதுறையில் கவனம் செலுத்தப்பட்ட நிலையில், தற்போது அரியலுாரில் சிறுத்தை நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால், அரியலுார் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில கிராமங்களில், தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு நாளைக்கு, 10 கி.மீ., வரை சிறுத்தை இடம் பெயர்வதாக தெரிய வந்துள்ளது. இந்த அடிப்படையில், அதன் நகர்வு தொலைவு மற்றும் திசை கணக்கிடப்பட்டு வருகிறது.காலடி தடம், சிறுநீர் கழித்த அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் பாதை கணக்கிடப்பட்டு, கூண்டுகள் வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிறுத்தை தற்போது அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களின் எல்லை கிராமங்களில் நடமாடுவதாக தெரிய வந்துள்ளது. இதனால், அடுத்து பெரம்பலுாரில் அதன் நடமாட்டம் இருக்கும் என்று கணக்கிட்டு, 'தெர்மல் ட்ரோன் கேமரா' பயன்படுத்தி, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
2013ல் நடந்தது என்ன?
பெரம்பலுாரில் சிறுத்தை நடமாட்டம் புதிதல்ல. ஏற்கனவே, 2013ல் இங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். அதனால், பெரம்பலுார், கவுல்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. குறிப்பாக, அரியலுார் - பெரம்பலுார் நெடுஞ்சாலையில் சிறுத்தை நடமாட்டத்துக்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்பின், 2013ல் சிறுத்தை பிடிக்கப்பட்டு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டது.