உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் கடலுார் தொகுதியில் காங்., வேட்பாளர் வெற்றி

தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் கடலுார் தொகுதியில் காங்., வேட்பாளர் வெற்றி

கடலுார்: கடலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத், ஆளும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் பலத்தால் வெற்றி வாகை சூடினார்.கடலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சியில் மணிவாசகம் உட்பட 19 பேர் போட்டியிட்டனர்.ஆண்கள் 6,93,353, பெண்கள் 7,19,178, திருநங்கைகள் 215 என மொத்தம் 14,12,746 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 10,21,114 பேர் ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவு சதவீதம் 72.28 ஆகும்.காங்., தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட்டதும், அவருக்கு திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.அதையே அடிப்படையாக வைத்து, தமிழக காங்., தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, கடலுார் லோக்சபா தொகுதியி்ல போட்டியிட வாய்ப்பு கேட்டு டில்லியில் முகாமிட்டிருந்தார். அவர், ஏற்கனவே, கடலுார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதால், மீண்டும் அவருக்கு கடலுார் தொகுதி ஒதுக்கப்படும் என, அக்கட்சியினர் எதிர்பார்த்தனர்.ஆனால், ஆரணி தொகுதி சிட்டிங் எம்.பி., யான விஷ்ணுபிரசாத்தை கடலுார் வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவித்தது. இவர், வெளியூரை சேர்ந்தவர். தொகுதிக்கு புதுசு. பா.ம.க, தலைவர் அன்புமணியின் மைத்துனர். இவருக்கு மக்கள் போடும் ஓட்டுகள் எல்லாம் பா.ம.க., வுக்கு போடுவதாகத்தான் அர்த்தம் என்றெல்லாம் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.இருப்பினும் கூட்டணி பலம், பண பலம், ஆளுங்கட்சி அதிகாரம், இம்மாவட்டத்தில் இரு அமைச்சர்களின் செல்வாக்கு போன்றவை காங்., வேட்பாளருக்கு மிகவும் பக்கபலமாக இருந்தது.நிர்வாகிகள் உள்ளிட்ட காங்., கட்சியினர், எப்படியும் தங்களை வேட்பாளர் விஷ்ணுபிரசாத் சந்தித்து ஆதரவு கேட்பார் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், காங்., வேட்பாளர் கட்சிக்காரர்கள் எதிர்பார்த்ததுபோல் அல்லாமல் காங்., நிர்வாகிகள் பலரை சந்திக்கவே இல்லை. மொத்தத்தில் சொல்லப்போனால் காங்., நிர்வாகிகள், கட்சியினரை கண்டுகொள்ளவே இல்லை. வேட்பாளருடன் பிரசாரத்தில் ஈடுபடுபட்ட காங்., கட்சியினருக்கு கூட செலவு செய்வதில் தாராளம் காட்டவில்லை.தி.மு.க., வின் பலத்தை நம்பி மட்டுமே போட்டியிட்டார். அதனால் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் பிரசாரத்தின்போது பெரிய அளவில் அலட்டிக்கொள்ளவில்லை.துவக்கத்தில் இருந்தே நாம் கூட்டணி பலத்தால் வெற்றி பெற்றுவிடுவோம் என, தன்னம்பிக்கையோடு பிரசாரத்தில் ஈடுபட்டார். அதற்கேற்ப எதிர் கட்சி வேட்பாளர்களாக பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., வால் பெரிய அளவில் அவருக்கு பாதிப்பு இல்லை. அதனால் கடலுாரில் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் மகத்தான வெற்றியும் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி