உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிலைகளை படைத்து கலையை சிறப்பித்தவர்கள் பல்லவர்கள்!

சிலைகளை படைத்து கலையை சிறப்பித்தவர்கள் பல்லவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டார சமஸ்கிருத கல்வெட்டாய்வாளர் கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள, 'பல்லவா ஸ்கல்ப்சர்ஸ் - கல்ச்சுரல் ஸ்டடி' என்ற ஆங்கில நுால் வெளியீட்டு விழா, ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேஷனில் நேற்று நடந்தது. நுாலை, மத்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட, சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேஷனின் தலைவர் நந்திதா கிருஷ்ணா பெற்றுக்கொண்டார்.சத்தியமூர்த்தி பேசியதாவது:காஞ்சியில், 275 முதல் 897 வரை ஆண்ட பல்லவர்கள், கலைகளில் மிகச் சிறந்தவர்களாக விளங்கி, குடைவரைக் கோவில்களை அமைத்தனர். அவர்கள் வடித்த சிலைகளில் நளினம் மிளிர்ந்தது. முக்கியமாக, மாமல்லபுரம் சிற்பங்கள், நம் புராணங்கள், இதிகாசங்கள், வேதங்களின் கருத்துகளை விளக்குவதாக உள்ளன.அங்குள்ள சிற்பத் தொகுதி, காலத்தையும் நேரத்தையும் விளக்குவதாக தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. கங்காதர மூர்த்தியான சிவன் தன் ஜடா முடியில் கங்கையை வாங்குவதாக அமைந்துள்ள சிற்பத்தில், கங்கையின் ஆக்ரோஷத்தை உணர்த்துவதற்காக, ஏற்கனவே அவர் தலையில் உள்ள சந்திரனை, இன்னொரு கையில் எடுத்து வைத்திருப்பதாக வடிக்கப்பட்டிருக்கும்.அது மதிய நேரத்தில் நடப்பதை உணர்த்துவதற்காக, இரண்டு கைகளின் இரண்டு விரல்களையும் மடித்து, அதன் இடைவெளியில் சூரியனைப் பார்த்து மந்திரம் ஓதுவது போலவும், அங்குள்ள விலங்குகள் அயர்ந்து படுத்திருப்பது போலவும், அது வசந்த காலத்தில் நிகழ்ந்தது என்பதற்கு, ஒருவர் பலாப்பழத்தை சுமந்து செல்வது போலவும் செதுக்கப்பட்டிருக்கும்.அதேபோல நிகழ்காட்சிகள் எனும், 'அனிமேஷன்' தொடரை விளக்குவதாக மகிஷாசுரமர்த்தினி, பகீரதன், விஷ்ணு உள்ளிட்ட சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கும். கலைநயத்துடனும், நுணுக்கமாகவும் படைத்து, பல்லவர்கள் கலைகளை சிறப்பித்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.நுாலை பெற்ற நந்திதா கிருஷ்ணா பேசுகையில், “இது சிறப்பான ஆய்வு நுாலாக வெளிவந்துள்ளது. எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ஆர்., பவுண்டேஷன் நுாலகத்தில், நம் கலை, கலாசாரம் குறித்த நுால்கள் நிறைய உள்ளன. இவற்றை, வேலைநாட்களில், காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை, ஆய்வாளர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்றார்.நுாலாசிரியர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:நான் சென்னை பல்கலையில், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவர் பாலாஜியின் தலைமையில் முனைவர் பட்டத்துக்காக, பல்லவர் சிற்பங்களை ஆய்வு செய்தேன். அப்போது, அவற்றில் அழகியலோடு சமூக ஒருங்கிணைவும் இருந்ததை அறிய முடிந்தது.ஒவ்வொரு சிற்பமும் அப்போதைய சமூக நிலையை படம்பிடிப்பதாக உள்ளது. ஆண்கள், பெண்களின் உடைகள், ஆபரணங்கள் உள்ளிட்டவை விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, தொண்டை மண்டலத்தில் உள்ள 65 நுால்களை ஆய்வு செய்தேன்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
ஆக 18, 2024 07:40

வாழ்த்துக்கள், இதில் எழுதியவர் பெயர் , மற்றும் வடமொழி ல்லாம் கலந்த செய்தியாக இருப்பதால் இந்த செய்திக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ராஜராஜ சோழன் தான் சிலைகளை படைத்தது இந்த கலையை நாடுமுழுவதும் குறிப்பாக கடற்கரை சாலையில் சிலைகளை வைத்து சிறப்பித்தான் என்று வழக்கில் ஜெயித்தும் நிலைநாட்டுவார்கள் . காரணம் நடுத்தர மக்கள் பாவம் படித்தால் வேலை, என்று நினைத்து அதிலேயே கவனம் செலுத்தி பாதி வாழ்க்கையை தொலைத்து , மீத வாழ்க்கையை வியர்வை சிந்தி உழைத்து , பள்ளிக்கே செல்லாத , கத்தி, சைக்கிள் செயின் , சோடா பாட்டிலையே மூலதனமாகக் கொண்டு மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்காக வாழவேண்டிய ஒரு நிலை, இந்த செய்தி ஏதோ யார் மீதோ கோபத்தில் இல்லை, நடைமுறையை விளக்கியிருக்கிறேன் . வந்தே மாதரம்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி