| ADDED : ஜூலை 10, 2024 02:18 AM
மதுரை:விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த லிங்கம், அவரது மனைவி பழனியம்மாள் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். சிலரிடம் 1 கோடி ரூபாய் வரை கடன் வாங்கினர். தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை.கந்துவட்டி கொடுமையால் லிங்கம், பழனியம்மாள், மகள், மகன் மற்றும் 3 மாத பேரக்குழந்தையுடன் மே 22ல் தற்கொலை செய்து கொண்டனர். திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் கைதான எம்.புதுப்பட்டி எஸ்.முருகன், மணிவண்ணன், வி.முருகன் ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.நீதிபதி பி.புகழேந்தி: குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வட்டிக்காக லிங்கத்தின் மனைவியை கோரும் அளவுக்குச் சென்றுள்ளனர் என போலீசார் பதிவு செய்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. மாநிலத்திலுள்ள வருந்தத்தக்க நிலை இதுதான். இறந்தவர்களில் இருவரின் வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. திருத்தங்கல் போலீசாரின் நடவடிக்கையின்மையே லிங்கம் குடும்பத்தை தற்கொலை செய்ய வைத்துள்ளது.சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபிறகே, காவல்துறை விழித்துக் கொள்கிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 50 பேர் இறந்த பிறகுதான் விழித்துக் கொண்டு உள்ளனர்.அதுபோல, இவ்வழக்கில் அதிகாரிகளின் செயலற்ற தன்மை, ஐந்து பேர் கொண்ட ஒட்டுமொத்த குடும்பத்தின் மரணத்திற்கு வழிவகுக்கிறது. ஐந்து பேர் இறந்த பிறகும், கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் போல அரசு விழித்துக் கொள்ளவில்லை. இதுநாள் வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.குற்றத்தின் தன்மையைக் கருதி மனுதாரர்களுக்கு ஜாமின் வழங்க விரும்பவில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. திருத்தங்கல் போலீசாரிடம் விசாரணையை தொடர அனுமதித்தால், இறந்தவர்களுக்கு நீதி கிடைக்காது. எனவே, மேல்விசாரணையை விருதுநகர் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் டி.எஸ்.பி.,மேற்கொள்ள வேண்டும். பயனுள்ள விசாரணையானது எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும்.இவ்வாறு உத்தரவிட்டார்.