உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜிக்கு பதிலளிக்க அமலாக்க துறைக்கு அவகாசம்

செந்தில் பாலாஜிக்கு பதிலளிக்க அமலாக்க துறைக்கு அவகாசம்

சென்னை:அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதில் அளிக்க, அமலாக்கத் துறைக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியின் போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது, போக்குவரத்துத் துறையில் பணி நியமனம் பெற்று தருவதாக, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் நடவடிக்கை எடுத்தது. செந்தில் பாலாஜி வீட்டில் நடந்த சோதனைக்கு பின், கடந்த ஆண்டு ஜூனில் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில், அமலாக்கத் துறை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டது. வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார்.மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதையடுத்து, விசாரணையை, வரும் 21க்கு தள்ளிவைத்த நீதிபதிகள், மீண்டும் அவகாசம் கோராமல் பதில் மனுத் தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தினர்.

ஜாமின் விசாரணை 20க்கு ஒத்தி வைப்பு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றது தொடர்பான பண மோசடி வழக்கில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, ஏ.ஜி.மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றொரு வழக்கில் ஈடுபட்டுள்ளதால், இந்த வழக்கை ஒத்தி வைக்கும்படி அவகாசம் கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள், வரும் 20க்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ