உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டார் விஜயபிரபாகரன்  மறு ஓட்டு எண்ணிக்கை கேட்கிறார் பிரேமலதா

சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டார் விஜயபிரபாகரன்  மறு ஓட்டு எண்ணிக்கை கேட்கிறார் பிரேமலதா

சென்னை:''விஜயபிரபாகரன் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டு உள்ளார். எனவே, விருதுநகர் தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கையை விரைந்து நடத்த வேண்டும்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார். அவர் அளித்த பேட்டி:விருதுநகரில் விஜயபிரபாகரன் தோல்வி அடையவில்லை; தோற்கடிக்கப்பட்டு உள்ளார். இதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. விருதுநகரில் மொத்தம் 10 லட்சம் ஓட்டுக்கள் வரை பதிவாகியுள்ளன. இதில், விஜயபிரபாகரனுக்கு 3.80 லட்சம் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூரிடம் 4,379 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், அவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளியிட்ட, ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் தொடர்பான அறிவிப்புகளில் முரண்பாடுகள் இருந்துள்ளன. அங்கு உணவு இடைவேளைக்கு நேரம் ஒதுக்கிய பின்னும், பிற்பகல் 3:00 மணி முதல் 5:00 மணி வரை ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 'எனக்கு பல இடங்களில் இருந்து நிர்பந்தம் வருகிறது; என்னால் சமாளிக்க முடியவில்லை; போனை ஸ்விட்ச் ஆப் செய்யப் போகிறேன்' என தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் வெளிப்படையாக கூறியுள்ளார். அவரை செயல்படவிடாமல் தடுத்த சக்தி எது?தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அவர் அறிவித்த நேரத்தில், விருதுநகர் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தது. விருதுநகரில் நள்ளிரவு வரை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. முதல்வர் கூறிவிட்டதால், அதை உண்மையாக்க, மூன்று அமைச்சர்கள் சென்று அதிகாரிகளை நிர்பந்தம் செய்து, விருதுநகரில் காங்கிரஸ் வெற்றியை அறிவிக்க வைத்துள்ளனர். இதுகுறித்து அப்போதே தே.மு.தி.க., தரப்பில் கேள்வி எழுப்பபட்டு உள்ளது; பதில் இல்லை. எனவே, விருதுநகர் தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கையை விரைந்து நடத்த வேண்டும். முதல்முறை போட்டியிடும் ஒரு இளைஞரை ஜெயிக்க வைத்திருக்க வேண்டும். விஜயபிரபாகரன் சின்னப் பையன். அவனை பெரிய மனதோடு ஜெயிக்க வைத்திருந்தால், இந்த ஆட்சியை தலைவணங்கி வரவேற்று இருப்போம். ஆனால், வெற்றி பெறக் கூடாது என அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் கமிஷனில் தே.மு.தி.க., மனு

'விருதுநகர் லோக்சபா தொகுதியில், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதால், மறு ஓட்டு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும்' என, தே.மு.தி.க., சார்பில், தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், புகார் மனு அளித்த பின், தே.மு.தி.க., வழக்கறிஞர் ஜனார்தனன் கூறியதாவது:விருதுநகர் தொகுதியில், ஓட்டு எண்ணிக்கையின் போது நிறைய முறைகேடு நடந்துள்ளது. இ - மெயிலில் புகார் மனு அனுப்பினோம். ஆனால், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, புகார் மனு வரவில்லை என கூறியுள்ளார். அதனால், நேரடியாக அவரிடம் மனு அளிக்க வந்தோம்; அவர் சந்திக்கவில்லை. அடுத்த நிலை அதிகாரியிடம், மனு அளித்தோம். டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனரிடம் நேரடியாக மனு அளிக்க உள்ளோம். விருதுநகரில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்பதே, எங்கள் கோரிக்கை. தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

'கோர்ட்டுக்கு தான் போகணும்!'

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:தே.மு.தி.க., சார்பில் மறு ஓட்டு எண்ணிக்கை கோரி, தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு, மனு எதுவும் வரவில்லை.ஓட்டு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், மறு ஓட்டு எண்ணிக்கை கோரி, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடலாம். நீதிமன்றம் உத்தரவின்படி, தேர்தல் கமிஷன் செயல்படும். தேர்தல் புகார் தொடர்பாக, 45 நாட்களுக்குள் நீதிமன்றம் செல்ல வேண்டும். அதுவரை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அப்படியே பாதுகாக்கப்படும். அதன்பின், நீதிமன்றம் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பாதுகாக்கும்படி உத்தரவிட்டால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை