உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுயசான்று கட்டட அனுமதியில் வாகன நிறுத்துமிடம்  எங்கே?

சுயசான்று கட்டட அனுமதியில் வாகன நிறுத்துமிடம்  எங்கே?

சென்னை:'சுயசான்று முறையில் அனுமதி பெறப்படும் கட்டடங்களில், வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான வழிமுறைகள் தெளிவாக இல்லை' என, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்தனர். தமிழகத்தில், 2,500 சதுர அடி மனையில், 3,500 சதுர அடி பரப்பளவுக்கு வீடுகள் கட்ட, சுய சான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. அதிகாரிகளின் தலையீடு இல்லாததால், எவ்வித தாமதமும் இன்றி மக்கள் கட்டட அனுமதி பெற, இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன்படி, தரை தளம், முதல் தளம் வரை, 2 வீடுகள் கொண்டதாக கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். குறிப்பிட்ட சில அடிப்படை ஆவணங்கள், வரைபடங்களை தாக்கல் செய்தால் போதும் என, இதற்கான நடைமுறை எளிமையாக உள்ளது. இதில், 2 வீடுகள் என்ற கட்டுப்பாடு இருப்பதால், பெரும்பாலான திட்டங்களில் கட்டுமான பரப்பளவு, 2,000 அல்லது 2,500 சதுர அடி வரையிலேயே வருகிறது. கட்டட தளப்பரப்பு குறியீடான எப்.எஸ்.ஐ., அடிப்படையில், நிலத்தின் பரப்பளவில், 1.5 மடங்குக்கு மட்டுமே கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது பிற வகை கட்டடங்களுக்கு, இரண்டு மடங்கு வரை தளப்பரப்பு குறியீடு அனுமதிக்கப்படுகிறது. இது குறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது: சுயசான்று முறையில் மக்கள் வீடு கட்ட எளிதாக, அனுமதி பெற முடிகிறது. ஆனால், நடைமுறை ரீதியாக, இதில் சில பிரச்னைகள் தெரியவந்துள்ளன. பொது கட்டட விதிகளின் அடிப்படையில், 750 சதுர அடிக்கு ஒரு கார் நிறுத்துமிடம் ஒதுக்க வேண்டும். ஆனால், சுயசான்று முறையில் வழங்கப்படும் கட்டட அனுமதியில், எப்.எஸ்.ஐ., எனப்படும் தளப்பரப்பு குறியீட்டுக்குள் ஒரு பகுதியாக வாகன நிறுத்துமிடம் கணக்கிடப்படுகிறது. பிற கட்டடங்களுக்கு வழங்கப்படுவது போன்று, இதற்கு தனியான வசதியாக வாகன நிறுத்துமிடங்களை அனுமதிக்க வேண்டும். இதனால், பயன்பாட்டுக்கான இடவசதி மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொறியாளர் இல்லாமல் எப்படி?

இ - சேவை மையங்கள் வாயிலாக, இதற்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறை ஏற்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இ - சேவை மையங்கள் வாயிலாக, பொது மக்கள் தாங்களாக விண்ணப்பிக்கும் முறை வந்தால், பதிவு செய்த பொறியாளர்கள் பங்கேற்பு கேள்விக்குறியாகி விடும். தவறான வரைபடத்தை தாக்கல் செய்யும் நிலை ஏற்படும். இது கட்டடத்தின் தரம், வடிவமைப்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். பதிவு செய்த பொறியாளர்கள் பங்கேற்பு இல்லாத வகையில், புதிய வழிமுறைகளை ஏற்படுத்துவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என, கட்டுமான பொறியாளர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ