உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 547 ஆம்னி பஸ்களுக்கு 18-ம் தேதி வரை கெடு !

547 ஆம்னி பஸ்களுக்கு 18-ம் தேதி வரை கெடு !

சென்னை : வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட, 547 ஆம்னி பஸ்களுக்கு, வரும் 18ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டு உள்ளது. பதிவு எண்ணை மாற்றத் தவறினால், தமிழகத்தில் ஓட்ட முடியாது என்று, அரசு எச்சரித்துள்ளது.தமிழகத்தில் ஏராளமான ஆம்னி பஸ்கள் வெளி மாநில நம்பர் பிளேட் பொருத்தி ஓடிக்கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் புதுச்சேரி பதிவெண் கொண்ட பஸ்கள் அதிகம் காணப்பட்டன.

உத்தரவு

யூனியன் பிரதேசமான புதுவையில் வரிகள், கட்டணங்கள் குறைவு என்பதால் அங்கே வாங்கி இங்கே இயக்கினர். சமீப காலமாக நாகாலாந்து சிக்கிம் போன்ற தொலைதுார மாநிலங்களின் பதிவு எண் கொண்ட பஸ்களையும் சகஜமாக பார்க்க முடிகிறது.இது தவிர, அகில இந்திய சுற்றுலா செல்வதற்கான அனுமதி சீட்டு பெற்று இயங்கும் ஆம்னி பஸ்களும், பயணியர் பஸ்கள் போல் ஓட்டப்படுகின்றன. இவை தமிழக அரசுக்கு பதிவு கட்டணம், உரிமம் கட்டணம் எதுவும் செலுத்துவது இல்லை என்பதால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, எந்த மாநில பதிவு, உரிமம் பெற்றிருந்தாலும் தமிழகத்தில் அந்த பஸ்களை மறு பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என உத்தரவிட்டது. அவ்வாறு செய்வதை கூடுதல் செலவாக கருதிய ஆம்னி பஸ் உரிமையாளர்கள், அடுத்தடுத்து அவகாசம் கேட்டனர். அரசும் மூன்று முறை அவகாசம் வழங்கியது. ஆனால், 105 பஸ்கள் மட்டுமே தமிழக பதிவுக்கு மாறின. 547 பஸ்கள் டி.என்., என துவங்கும் வாகன பதிவெண் பெறவில்லை. தமிழக பதிவெண் மற்றும் உரிமம் பெறாத அந்த பஸ்களை, இன்று முதல் தமிழகத்தில் ஓட்டக்கூடாது என போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் நேற்று காலை தடை அறிவித்தார்.உடனே ஒன்று திரண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள், நேற்று மதியம் போக்குவரத்து ஆணையரை சந்தித்தனர். மீண்டும் ஒரு அவகாசம் தருமாறு கேட்டனர். ஆணையர் மறுத்து விட்டார். முயற்சியில் மனம் தளராத ஆம்னி அதிபர்கள், நேராக தலைமை செயலகத்துக்கு சென்றனர். போக்குவரத்து அமைச்சர் சிவசங்கரை சந்தித்தனர். இறுதியாக ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்; அது முடிவதற்குள் அரசு உத்தரவை நிறைவேற்றுகிறோம் என்றனர். ஞாயிறு விடுமுறை, திங்கள் பக்ரீத் அன்று போக்குவரத்து அதிகாரிகள் அலுவலகம் இயங்காது என்பதால் செவ்வாய் வரை அவகாசம் கேட்டனர். அமைச்சர் சம்மதித்தார். வரும் 18ம் தேதி காலை வரை அவகாசம் அளித்து, அரசு உத்தரவு வெளியானது. அன்று மதியத்தில் இருந்தே பதிவெண் மாற்றாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

வெளிமாநில பதிவு ஏன்?

இந்த கேள்வியை அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகனிடம் கேட்டோம். அவர் சொன்னார்:உட்கார்ந்து செல்லும் பஸ்களுக்கு மட்டும் தான் தமிழக அரசு உரிமம் தந்து கொண்டிருந்தது. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு இப்போது தான் வழங்க ஆரம்பித்துள்ளது. மற்ற மாநிலங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்படுகிறது. தவிர, மற்ற மாநிலங்களில் ஆம்னி பஸ்களை ஓரிரு நாளில் பதிவு செய்து விடலாம்; கட்டணமும் குறைவு. தமிழகத்தில் பஸ்களை பதிவு செய்ய ஒரு மாதம் வரை ஆகிறது. கட்டணங்களும், செலவும் மிக அதிகம். எனவே, பெரும்பாலான பஸ்கள் வெளி மாநில நம்பர் பிளேட்டுடன் ஓடுகின்றன. தமிழக அரசும் உரிமம் அளிப்பதை துரிதப்படுத்தி, கட்டணங்களை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mani . V
ஜூன் 15, 2024 09:26

ஆமாம், லஞ்சம் கொடுக்கவும் பதினெட்டாம் தேதிவரை கெடு.


Ram pollachi
ஜூன் 14, 2024 20:26

ஆம்னி பஸ் மட்டும் அல்ல , பெரும்பாலான லாரிகள் கர்நாடகாவில் பதிவு செய்து தமிழகத்திலேயே இயக்குகிறார். கேரளா மற்றும் கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட கார்கள் நிரந்தரமாக இங்கேயே ஓடுகிறது. சாலை வரி அவர்களுக்கு தேய்மானம் நமக்கு.


Vivekanandan Mahalingam
ஜூன் 14, 2024 10:54

திராவிட மாடல் - லஞ்சம் வாங்க புது ரூட்


ديفيد رافائيل
ஜூன் 14, 2024 15:37

தமிழ்நாடு RTO எதுக்கு இருக்கு. வண்டி வாங்கும் போதே tamilnadu registration பண்ண வேண்டியது தானே


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 14, 2024 09:53

தமிழகம் வேட்டைக்கார்களின் சொர்க்கமாக மாறிக்கொண்டு இருக்கிறது. நிர்வாகம் நடத்த தெரியாதவனெல்லாம் சமூகநீதி போர்வையில் ஆட்சியை பிடித்து தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழன் விழிப்படையாதவரை இது தொடரும்.


திண்டுக்கல் சரவணன்
ஜூன் 14, 2024 09:25

தனியார் பேருந்து கட்டணம் அதிகமாக இருக்க முக்கிய காரணமே, லஞ்சம் மற்றும் அதிகப்படியான வரி


Kasimani Baskaran
ஜூன் 14, 2024 06:27

கொள்ளை கட்டணம், மேஜைக்கு கீழே வேறு வெட்டவேண்டும். பிறகு எப்படி அரசாணையை மதிப்பார்கள். நாங்களும் நல்ல பஸ் விடமாட்டோம்.. நீங்களும் கூட விடக்கூடாது.


sankaranarayanan
ஜூன் 14, 2024 06:18

பெரும்பாலான பஸ்கள் வெளி மாநில நம்பர் பிளேட்டுடன் ஓடுகின்றன. அதுபோலவே பெருபாலான வெளி மாநிலவேலையாட்கள் தமிழிழகத்தில் திராவிட விடியல் அரசில் எல்லா வேலைகளையும் திறம்பட செய்கிறார்கள் அதற்கு என்ன சேவார்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை