உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேளாண் முறைப்படுத்துதல் சட்டம் செயல்பாட்டுக்கு வராது : முதல்வர்

வேளாண் முறைப்படுத்துதல் சட்டம் செயல்பாட்டுக்கு வராது : முதல்வர்

சென்னை : முந்தைய அரசு கொண்டு வந்த, வேளாண்மை செய்முறை முறைப்படுத்துதல் சட்டம், செயல்பாட்டுக்கு வராது என்று, முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

சட்டசபையில், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் பேசும் போது, முந்தைய அரசு கொண்டு வந்த வேளாண் செய்முறை முறைப்படுத்துதல் சட்டத்தில் உள்ள, குறைபாடுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து, முதல்வர் ஜெயலலிதா பேசும் போது, ''தி.மு.க., ஆட்சியில் வேளாண்மைத் துறை சார்பில், 2009ம் ஆண்டு இச்சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இச்சட்டம் அமலுக்கு வரும் தேதி, அரசிதழில் அறிவிப்பாணை மூலம் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், இச்சட்டம் பற்றிய அறிவிப்பாணை வெளியிடப்படவில்லை. எனவே, இந்தச் சட்டம் செயல்பாட்டில் இல்லை. இதற்கான அறிவிப்பாணையை, இந்த அரசு வெளியிடாது. அறிவிக்கை செய்யாவிட்டால், செயல்பாட்டுக்கு வராது. இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமா என்பது பற்றி, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்'' என்றார்.

சட்டசபை நடக்கும் போதெல்லாம், எந்த அரசாக இருந்தாலும், முந்தைய அரசை இடித்துரைக்க மறக்காது. சில நேரங்களில், உருப்படியான தகவல்களும் வெளியாகும்.

பாலகிருஷ்ணன்-மார்க்சிஸ்ட்:

* உணவு உற்பத்தியை, 115 மெட்ரிக் டன்னாக மாற்றுவோம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. சாகுபடி செய்யப்படும் நிலங்களின் அளவு, 50 லட்சம் ஏக்கருக்குள் இருக்கும் நிலையில், இந்த இலக்கை எட்டுவது, அவ்வளவு சுலபம் கிடையாது. இலக்கை அடைவதற்கு, சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.* உரம் விலை கடுமையாக உயர்ந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தான், மத்தியில் உரத்துறை அமைச்சராக இருக்கிறார். அப்படியிருந்தும், உர விலை உயர்வைக் கட்டுப்படுத்த, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது, தமிழகத்திற்கே வெட்கக்கேடு.* மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பரிசோதிக்க வேண்டுமெனில், மாநில அரசுகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால், தற்போது அந்த அனுமதியைப் பெறாமல், மத்திய அரசு நேரடியாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பரிசோதிக்க முயற்சித்து வருகிறது. இது, மிகவும் ஆபத்தானது. மத்திய அரசின் இந்த முயற்சி, விவசாயிகளை ஓட்டாண்டியாக்கிவிடும்.* நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு, 1,100 ரூபாய் தமிழக அரசு விலை நிர்ணயம் செய்திருந்தாலும், அந்த விலை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. புரோக்கர்கள், 600, 700 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயம் செய்வதில்லை. அரசு நிர்ணயம் செய்த விலையில், நெல் கொள்முதல் செய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.* 'ராஜராஜன்-1000' என்ற புதிய ரக நெல் விதையைக் கண்டுபிடித்ததாகக் கூறி, அதை அப்போதைய முதல்வரும் அறிவித்தார். உண்மையில், இது ஒரு புதிய ரக நெல்லே கிடையாது. இது, வேளாண் பல்கலைக்கு தெரியும். ஆனால், அப்போதைய முதல்வர், அதைப் புரிந்து கொள்ளவில்லை.

தனியரசு - கொங்கு இளைஞர் பேரவை : விவசாயிகளை நூறு நாட்கள் முடக்கி வைக்கும் திட்டத்துக்கு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என பெயரிட்டுள்ளனர்.நாட்டில் கோடிக்கணக்கான விவசாயிகளை முடக்கும் இத்திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்துகிறது. குறைந்தபட்சம் இத்திட்டத்தை, தமிழகத்தில் அல்லது மேற்கு மண்டலத்திலாவது, தடுத்து நிறுத்த வேண்டும்.

கலையரசன் - பா.ம.க., : டிராக்டர் மற்றும் விவசாயக் கருவிகளை, 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும்.விளை நிலங்களை, நகர வளர்ச்சிக்கு மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். மிகவும் வறட்சியான வேலூர் மாவட்டத்தின் விவசாயத்துக்காக, காவிரி - பாலாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

ஜவாஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சி : இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு வித்திடும் வகையில், உணவு தானிய உற்பத்தியை, 118 லட்சம் டன்களாக உயர்த்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்னை விரிவாக்கத் திட்டத்தை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

கதிரவன் - பார்வர்டு பிளாக் : விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பழுதாகி உள்ளன.* சூரிய சக்தி மின்சாரத்தை, விவசாயிகள் பயன்படுத்த மானியம் அளிக்க வேண்டும். உழவர் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும். முந்தைய ஆட்சியில், 2009ம் ஆண்டு, வேளாண் பட்டயப் படிப்பு முடித்த 1,750 பேரையும், 2010ல் 910 பேரையும் பணி நியமனம் செய்தனர். இதில், 1983ல் படிப்பு முடித்தவர்களுக்கு வேலை இல்லை. 2008ல் பதிவு செய்தவர்களுக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.

சந்திரகுமார்: தேர்தல் வாக்குறுதியில், கரும்பு டன்னுக்கு 2, 500 ரூபாய் வழங்குவோம் என, அ.தி.மு.க., அறிவித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் வர்த்தகத்தில், தனியார் நிறுவனங்கள், அரசுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றன. இதை, அரசு கவனிக்க வேண்டும். உரம் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. 450 ரூபாய்க்கு விற்ற டி.ஏ.பி., உரம் இன்று, 690 ரூபாயாக உயர்ந்துவிட்டது. இவ்வாறு, விவாதம் நடந்தது.

இவற்றுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்: வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில், நான்கு தான் பழுதாகி உள்ளன. பயன்பாட்டில் 107 கூடங்கள் உள்ளன. இவற்றில், 47 கூடங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. சரி செய்ய, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளை பங்குதாரர்களாக உருவாக்கி, விற்பனைக் கூடங்கள் சிறப்பாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை