சென்னை : தமிழகத்தில் மட்டுமே அரிசி கார்டு, சர்க்கரை கார்டு, பொருளில்லாத கார்டு என மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அரிசி கார்டுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, பேரிடர் நிவாரண தொகை உட்பட அரசின் இலவசங்கள் கிடைக்கின்றன. இதனால், அரிசி கார்டுகளே அதிகம் புழக்கத்தில் உள்ளன.ரேஷன் கார்டு தேவை என்றால் உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு 'ஆதார்' எண் அவசியம். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வீடு தேடி சென்று ஆய்வு செய்து, விபரங்கள் சரியாக இருந்தால் கார்டு வழங்கலாம் என்பது விதி. இந்த முறையில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 40,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்து, 20,000 குடும்பங்களுக்கு கார்டுகள் வழங்குகின்றனர். மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தபோது, அதை பெறுவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது. அவர்களில் தகுதியான வர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித் தொகை வழங்கப்படுகிறது.ஒரே வீட்டில் இரண்டு மூன்று பெண்கள் இருந்தால், தனித்தனி குடும்பம் என்று கூறி அனைவரும் கார்டு கேட்டதால் விண்ணப்பங்கள் மலைபோல் குவிந்தன. இந்த தகவல் தெரிந்ததும் நிதித் துறையில்பரபரப்பு ஏற்பட்டது. லட்சக்கணக்கில் புது கார்டு வழங்கி, அத்தனை பேரும் உரிமைத்தொகை கேட்டால் நிதிக்கு எங்கே போவது என உயர் அதிகாரிகள் திகைத்தனர். அதன் விளைவாக, புதிய கார்டு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு உணவுத் துறைக்கு உத்தரவிட்டது. இப்போது, புதிய கார்டு மட்டுமல்ல, பழைய கார்டில் பெயர் நீக்கல், சேர்த்தல் பணிகளும் நிறுத்தப்பட்டு விட்டன. தற்போதைய நிலவரப்படி, ஒரு லட்சத்துக்கு மேலான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ஆய்வு திருப்திகரமாக முடிந்த நிலையிலும், 50,000 கார்டுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அவர்கள் ஆறு மாதமாக உதவி ஆணையர் அலுவலகத்துக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்.”தற்போது, 2.20 கோடி அரிசி கார்டுகள் உட்பட, 2.24 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 கோடி. அதாவது, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள், ரேஷன் கார்டில் உறுப்பினர்களாக உள்ளனர். அரசின் இலவச சலுகைகளை பெற, புதிதாக திருமணமாகி பெற்றோருடன் வசிப்போர், தனியாக வசிப்பது போல், ஒரே முகவரியில் கூடுதல் எண்களை குறிப்பிட்டு, புது கார்டுக்கு விண்ணப்பம் செய்கின்றனர். எனவே தகுதியான நபரா என்பதை ஆய்வு செய்து, கார்டு வழங்கப்படுகிறது. இதனால் தாமதம் ஏற்படுகிறது” என ஒரு அதிகாரி கூறினார்.இவ்வாறு அவர் கூறினார்.
வழிவழியாக நீடிக்கும்
வாய்மொழி உத்தரவுமக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்றால், அதை முறையாகவும், வெளிப்படையாகவும் அறிவித்து விட்டு அதிகாரிகள் செயல்படுத்துவதில்லை. அடுத்தடுத்த நிலையில் இருக்கும் அலுவலர்களுக்கு, வாய் வார்த்தையாக விஷயத்தை தெரிவிப்பதோடு சரி. எழுத்துபூர்வமாக கொடுத்தால் யாராவது பிரச்னை ஆக்குவார்கள் என்ற பயம். எழுத்துபூர்வமாக இல்லை என்றால் யாரும் வழக்கு போடவும் முடியாது.காதோடு காது வைப்பது போல, வாய்மொழி உத்தரவு கீழ்நிலை அரசு ஊழியர்கள் வரை எடுத்துச் செல்லப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. சர்ச்சை ஏற்பட்டால், 'அப்படி எதுவும் இல்லையே' என அதிகாரிகள் கைவிரிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ரேஷன் கார்டு நிறுத்தம், கோவில்களில் சிறப்பு பூஜைக்கு தடை போன்றவை, இந்த ரக உத்தரவுகளே. திமுக, அதிமுக வேறுபாடு இல்லாமல் எல்லா அரசிலும் இது நடக்கிறது. ***
செலவு ரூ.10,500 கோடி
ஒரு கார்டுக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசமாகவும், ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும், 2 கிலோ சர்க்கரை 50 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. அரிசிக்கு 800 ரூபாய்; பருப்பு, பாமாயிலுக்கு தலா 75 ரூபாய்; சர்க்கரைக்கு 50 ரூபாய் என, ஒரு கார்டுக்கு மாதம் 1,000 ரூபாய், அரசு செலவு செய்கிறது. இந்த நிதியாண்டில் மட்டும், ரேஷன் உணவு மானியத்திற்காக 10,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
படிப்படியாக நிறுத்தம்
கடந்த 2022 ஜனவரி முதல், 2023 ஜூலை வரை, புதிய கார்டு கேட்டு, 8.92 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில், 5.63 லட்சம் பேருக்கு கார்டு வழங்கப்பட்டது. 32,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 2.71 லட்சம் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு ஜூனில் இருநதே, புது கார்டு வழங்குவதை அரசு படிப்படியாக குறைத்து விட்டது. ஜூலையில், 26,363 பேர் விண்ணப்பித்த நிலையில், 1,576 பேருக்கு மட்டுமே கார்டு கிடைத்தது.