உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருமானத்துக்கான ஆவணங்கள் இருந்தும் முதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை அமைச்சர் வழக்கில் மூத்த வக்கீல் வாதம்

வருமானத்துக்கான ஆவணங்கள் இருந்தும் முதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை அமைச்சர் வழக்கில் மூத்த வக்கீல் வாதம்

சென்னை:'அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், வருமானத்துக்கான ஆவணங்கள் இருந்தும், அவற்றை முதல் குற்றப்பத்திரிகையில் லஞ்ச ஒழிப்புத் துறை சேர்க்கவில்லை' என, மூத்த வழக்கறிஞர் வாதாடினார்.கடந்த 2006 - 11ல், தி.மு.க., அமைச்சரவையில், சாத்துார் ராமச்சந்திரன் இடம் பெற்றார். அந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 44.59 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, சாத்துார் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முக மூர்த்தி ஆகியோருக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை, 2011ல் வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து, கடந்த ஆண்டு ஜூலையில், ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.முரளீதர் ஆஜராகி வாதாடியதாவது:இவ்வழக்கில் மேல்விசாரணை நடத்த, புலன்விசாரணை அதிகாரிக்கு எந்த தடையும் இல்லை. இறுதி அறிக்கையை ஏற்பதா, மேல் விசாரணை அறிக்கையை ஏற்பதா என்பது குறித்து, சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்.மேல் விசாரணை என்பது, மறுவிசாரணை அல்ல; ஏற்கனவே நடந்த விசாரணையின் தொடர்ச்சி. மேல் விசாரணை நடத்த அனுமதித்ததில், சட்டவிரோதம் இல்லை.தியேட்டரை இடித்து, வீட்டுமனைகளாக விற்றதால் வந்த வருமானம், வாடகை வாயிலாக கிடைத்த வருமானம், நுாற்பாலை வாயிலாக கிடைத்த வருமானம் ஆகியவற்றுக்கு ஆவணங்கள் இருந்தும், முதல் குற்றப்பத்திரிகையில் லஞ்ச ஒழிப்புத்துறை சேர்க்கவில்லை. இரண்டாவதாக தாக்கல் செய்த அறிக்கையில் தான், இந்த வருமானங்கள் சேர்க்கப்பட்டன.சொத்து குறித்து விளக்கம் அளிக்க, லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய நோட்டீசுக்கு அளித்த பதிலின் அடிப்படையில், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது.முதல் குற்றப்பத்திரிகை, மேல் விசாரணை அறிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து தான், வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர் வாதாடினார்.அவரது வாதம், இன்றும் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ