உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  22 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல் விவகாரம் தமிழக கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

 22 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல் விவகாரம் தமிழக கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

சென்னை: விவசாயிகளிடம் இருந்து, 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழகம் விடுத்த கோரிக்கையை, மத்திய உணவு துறை நிராகரித்துள்ளது. அதேசமயம், 'இனி ஜனவரியில் தான் நெல்வரத்து அதிகம் இருக்கும் என்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை' என, தமிழக கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. நடப்பு சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நெல் தேங்கியது வழக்கத்தை விட அதிக நெல்வரத்து, விரைவாக கொள்முதல் செய்யாதது உள்ளிட்ட காரணங்களால், விவசாயிகளிடம் நெல் தேங்கியது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், கடந்த அக்டோபரில் மழை பெய்தது. இதனால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்தது. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய, மத்திய அரசுக்கு நுகர்பொருள் வாணிப கழகம், கடந்த அக்., 19ம் தேதி கடிதம் எழுதியது. இதையடுத்து, அம்மாதம் 25 முதல் 28ம் தேதி வரை செங்கல்பட்டு, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து, ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்த மத்திய உணவு துறை அதிகாரிகள் குழு, நெல் மாதிரிகளை எடுத்துச் சென்று, இந்திய உணவு கழக ஆய்வகங்களில் சோதனை நடத்தியது. பின், ஈரப்பத முடிவு குறித்த அறிக்கையை, இம்மாத துவக்கத்தில் மத்திய உணவு துறையிடம் சமர்ப்பித்தது. இருப்பினும், நெல் கொள்முதல் ஈரப்பத கோரிக்கை தொடர்பாக, மத்திய குழு எந்த தகவலும் வெளியிடாமல் இருந்தது. உயர்த்தவில்லை இந்நிலையில், நெல் ஈரப்பத அளவு தளர்வு உத்தரவை விரைவாக வழங்குமாறு, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் இம்மாதம் 18ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். நேற்று மாலை, நெல் ஈரப்பதம் தளர்வு கோரிக்கையை நிராகரித்து, தமிழக அரசுக்கு மத்திய உணவு துறை கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த செப்., 1ல் துவங்கிய நடப்பு சீசனில், நேற்று முன்தினம் வரை, 14.27 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவே, கடந்த சீசனின் இதே காலத்தில், 4.87 லட்சம் டன்னாக குறைந்திருந்தது. இனி, பொங்கலுக்கு பின் தான் நெல்வரத்து அதிகம் இருக்கும். இதனால், நெல்லின் ஈரப்பத அளவை மத்திய அரசு உயர்த்தவில்லை என்றாலும், விவசாயிகளுக்கு பெரியளவில் பாதிப்பு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். அழுகுரல் கேட்கவில்லையா? பிரதமருக்கு ஸ்டாலின் கேள்வி! 'கனமழை காரணமாக, ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழக விவசாயிகளின் அழுகுரல், பிரதமருக்கு ஏன் கேட்கவில்லை' என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை: விவசாயிகளிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம். கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி, பிரதமர் வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை. அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது, மத்திய பா.ஜ., அரசு. கனமழை காரணமாக, ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் குரல், பிரதமரின் காதுகளுக்கு ஏன் கேட்கவில்லை; விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை; கண்ணீர் ஏன் தெரியவில்லை? கடந்தாண்டுகளில் தமிழக அரசின் கோரிக்கைகள் அடிப்படையில், இத்தகையை ஈரப்பத அளவிற்கான தளர்வை பலமுறை வழங்கிய மத்திய அரசு, தற்போது வழங்க மறுப்பது ஏன்? கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது, விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்? உடனடியாக இதை மறு பரிசீலசனை செய்வதோடு, தமிழகத்தின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து, விவசாயிகளுக்கு மத்திய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை