சென்னை: 'தமிழக கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், 42 லட்சம் பேருக்கு, 45,000 கோடி ரூபாய் அளவுக்கு நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்றவற்றில், நகைக்கடன் உள்ளிட்ட பல பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. 'தங்கம் நகை அடமானம் வைக்கும் போது, தங்களுடையது தான் என்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு அம்சங்களுடன் கூடிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி, கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. இந்த விதிகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பொருந்தாது என, கூட்டுறவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பலரும் இந்தச் சங்கங்களில் கடன் வாங்கினர். சர்வதேச நிலவரங்களால், தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில், சவரன் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது. இதனால், கிராம் தங்கம் மதிப்பில், 75 சதவீதம் வரை கடனாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடப்பு, 2025 - 26ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, 42 லட்சம் பேருக்கு, 45,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில், 31 லட்சம் பேருக்கு, 33,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, கூடுதலாக, 11 லட்சம் பேருக்கு, 12,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 2024 - 25ம் நிதியாண்டு முழுதும், மொத்தம், 70.28 லட்சம் பேருக்கு, 62,001 கோடி ரூபாய் நகைக்கடன் வழங்கப்பட்டு உள்ளது.