உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதன் வீட்டில் ரெய்டு

நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதன் வீட்டில் ரெய்டு

சென்னை : பணமோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவநாதன் வீடு உட்பட 12 இடங்களில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில், பா.ஜ., கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டவர் தேவநாதன், 62. இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவரான இவர், 'மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்டு' என்ற நிதி நிறுவன தலைவராகவும் செயல்பட்டார்.சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில், 150 ஆண்டுகளாக செயல்படும் இந்த நிதி நிறுவனத்தில், ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மூத்த குடிமக்கள் முதலீடு செய்த, 525 கோடி ரூபாயை, கூட்டாளிகளுடன் சேர்ந்து தேவநாதன் மோசடி செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, முதலீட்டாளர்கள், 144 பேர் அளித்த புகாரில், சென்னை அசோக் நகரில் செயல்படும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 24.50 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது உறுதியானது. அதன் அடிப்படையில், தேவநாதன், அவரது கூட்டாளிகள் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.மேலும், பணமோசடி தொடர்பாக, சென்னை தி.நகர் தீனதயாளன் தெருவில் உள்ள தேவநாதன் வீடு உட்பட 12 இடங்களில், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணியில் இருந்து, இரவு, 8:00 மணி வரை சோதனை நடத்தியுள்ளனர். சென்னை மயிலாப்பூரில் தேவநாதன் நடத்தி வரும், தனியார், 'டிவி' நிறுவனத்தின் மாடியில், நிதி நிறுவனம் தொடர்பான அலுவலகம் உள்ளது. அதற்கும், 'சீல்' வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்