சென்னை : ஆன்லைன் முறையில், கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதில், தொழில்நுட்ப பிரச்னைகளால் சிரமம் ஏற்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், 10,000 சதுரடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதல் அளிக்கலாம். இதற்கான அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது. இதில், வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், பணிகள் விரைவாக நடக்க வேண்டும் என்பதற்காகவும், ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நிலை உள்ளாட்சி அமைப்புகள், தனித்தனி தளங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பெற்று வந்தன.இந்நிலையில், ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் அதில் இணைக்கப்பட்டுள்ளன. ஜன., 1 முதல் ஆன்லைன் முறையில் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள், கட்டட அனுமதி விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதன் அடிப்படையில், மேனுவல் முறையில் கட்டட அனுமதி விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டது. இதில், கிராம பகுதிகளில் இணையதள வசதி குறைபாடு, தொழில்நுட்ப பிரச்னைகளால், மக்கள் கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார்எழுந்துள்ளது.- பி.மணிசங்கர்,தலைவர், தமிழக வீடு,அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின்கூட்டமைப்பு
பணிகள் முடங்கும் நிலை
கட்டுமான திட்ட அனுமதி பணிகளை விரைவுபடுத்துவதற்காக ஆன்லைன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது, நகர்ப்புற பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், கிராம பகுதிகளில் முறையான இணையதள சேவை இல்லாத இடங்களில், கட்டட அனுமதிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. பொது மக்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என்பதால், உரிமம் பெற்ற பொறியாளர்கள் இப்பணிகளுக்காக அருகில் உள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அலுவலகங்களிலும், இணையதள வசதி முழுமையாக இல்லாத நிலையில் இப்பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இணையதள சேவை வசதி முழுமையாக கிடைக்கும் வரை, இத்துடன் கூடுதல் வசதியாக மேனுவல் முறையிலும் விண்ணப்பங்கள் பெற வேண்டும். தமிழக அரசு இந்த விஷயத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும்.