ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: எத்தனை தொகுதியில், எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து, தி.மு.க., வுடன் பேசி முடிவெடுக்கப்படும். தி.மு.க., தலைமைக்கு எந்த நிர்பந்தத்தையும் தர மாட்டேன். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவருக்கு தமிழகம் முழுதும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்; ரசிகர் மன்றங்கள் உள்ளன. விஜய் தலைக்கனம் இல்லாதவர்; நல்ல மனிதர்.டவுட் தனபாலு: நடிகர் விஜயை இந்த அளவுக்கு பாராட்டி தள்ளிட்டு, அறிவாலயத்துல, சீட் கிடைக்கும்னு நம்புறீங்களா... போன தேர்தல்லயாவது ஒரு சீட் தந்தாங்க... இப்ப, அதையும் பறிச்சுட்டு, கருணாநிதி பாணியில, இதயத்துல மட்டும் இடம் தந்துட்டா என்ன பண்ணுவீங்க என்ற, 'டவுட்' தான் வருது!பத்திரிகை செய்தி: 'காங்., - எம்.பி.,யாக இருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு, வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட, 'சீட்' வழங்கக் கூடாது' என, சிவகங்கை, காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.டவுட் தனபாலு: இந்த தீர்மானத்தை கண்டுக்காம, அவருக்கு மேலிடமும் சீட் கொடுத்து, அவரும் கூட்டணிகட்சியின் தயவுல ஜெயிச்சு, எம்.பி.,யும் ஆகிடுவாரு... சொந்த கட்சியினர் எதிர்ப்பையும் மீறி, சீட் வாங்கி ஜெயிக்கிற, 'காமெடி' எல்லாம், காங்கிரஸ்ல மட்டுமே நடக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை: வேலுார் மாவட்ட அமைச்சர் துரைமுருகன் கவனம் முழுதும் தற்போது அமலாக்கத் துறை மீதே உள்ளது. தமிழக அரசுக்கு, மணல் கொள்ளையால், வருமான இழப்பு மட்டுமே, 4,730 கோடி ரூபாய் என, உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கூறுகிறது. அதனால், அமலாக்கத் துறை நடவடிக்கை வரும் என அஞ்சுகிறார் துரைமுருகன். அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டுக் கதவை, அமலாக்கத் துறை அதிகாரிகள் எந்த நேரமும் தட்டலாம்.டவுட் தனபாலு: நீங்க அரசியலுக்காக இப்படி பேசப் போக, காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, நாளைக்கே அமலாக்கத் துறை, அவர் வீட்டுக்கு போயிட்டா, 'பாருங்க, அண்ணாமலை தான் அமலாக்கத் துறையை ஏவி விடறாரு'ன்னு உங்க மேல தான் பாய்வாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!