உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஸ்டாலின் தொலைத்த இரும்புக்கரத்தை கண்டுபிடித்தாலும் இனி பலன் இல்லை அ.தி.மு.க., கிண்டல்

 ஸ்டாலின் தொலைத்த இரும்புக்கரத்தை கண்டுபிடித்தாலும் இனி பலன் இல்லை அ.தி.மு.க., கிண்டல்

சென்னை: 'முழுநேர டி.ஜி.பி., கூட இல்லாத காவல் துறை மீது, குற்றவாளிகளுக்கு எப்படி பயம் வரும்' என, அ.தி.மு.க., கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக, அ.தி.மு.க., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் டி.ஜி.பி., அலுவலகத்தின் அருகே, கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அதேபோல, கோவையில் பெண் ஒருவரிடம் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில், காவல்துறை டி.எஸ்.பி.,யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். டி.ஜி.பி., அலுவலகம் அருகிலேயே, துணிந்து கொள்ளையன் கைவரிசை காட்டியிருப்பது, காவல் துறையை எந்த லட்சணத்தில், முதல்வர் ஸ்டாலின் நிர்வாகம் செய்கிறார் என்பதற்கு சாட்சி. முழுநேர டி.ஜி.பி., கூட இல்லாத ஒரு காவல் துறை மீது, குற்றவாளிகளுக்கு எப்படி பயம் வரும்? 'வேலியே பயிரை மேய்ந்தது போல்', காவல் துறையினர் மற்றும் அவர்களைச் சார்ந்தோரே குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவது, காவல் துறை நிர்வாகம் என்பது முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுகிறது. இதைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லாத, பொம்மை முதல்வராக இருக்கிறார், ஸ்டாலின். அவர், தொலைத்த இரும்புக்கரத்தை, இனிமேல் தேடிக்கண்டுபிடித்து, 'துரு' நீக்கினாலும், எந்தப் பயனும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பழனிசாமி அறிக்கை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: தமிழக மீனவர்கள், கைது செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது. கடந்த 8ம் தேதி பூம்புகாரைச் சேர்ந்த ராமையன் என்பவரது படகில், மொத்தம் 14 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். படகு பழுதானதால், காற்றின் வேகத்தில் திசை மாறி, இலங்கை கடற்பரப்பிற்குள் சென்றனர். அவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. படகு பழுதானதால் திசை மாறி வந்து விட்டதாக கூறியும், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில், தொழில் மேற்கொண்டு வருவதை, இனியும் ஏற்க முடியாது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை, தி.மு.க., அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ