சென்னை:பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ராஜேஷ்தாஸ் தலைமறைவாகி உள்ளார்.அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமி, 2021 பிப்., 21ல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, சிறப்பு டி.ஜி.பி.,யாக இருந்த ராஜேஷ்தாஸ் கண்காணித்தார். அதன்பின், பாதுகாப்பு பணி முடிந்து காரில் விழுப்புரம் புறப்பட்டார். அப்போது, தன்னுடன் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை காரில் ஏறச்சொல்லி பாலியல் தொல்லை கொடுத்துஉள்ளார். புகார்
சம்பவம் குறித்து டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்க, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி தன் காரில் சென்னை நோக்கி வந்தார். அவரை, செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி., கண்ணன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்; கார் சாவியையும் பிடுங்கினர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, தமிழக அரசின் உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது; இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பின், இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அரசு தரப்பு சாட்சிகளான 68 பேரிடம் விசாரித்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை தாமாகவே முன் வந்து, சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். ராஜேஷ்தாஸ் மற்றும் கண்ணன் தொடர்பான வழக்கை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி விசாரித்தார். தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ராஜேஷ்தாசுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதம்
அவருக்கு உடந்தையாக இருந்த கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார். ஜாமின் கோரிய ராஜேஷ்தாஸ் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.ராஜேஷ்தாஸ் சரணடைவார் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், தலைமறைவாகி விட்டார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். சென்னை கேளம்பாக்கம் அருகே, தையூர் பகுதியில் உள்ள ராஜேஷ்தாஸ் சொகுசு பங்களாவுக்கு சென்று நேற்று விசாரித்தனர். அப்போது, ராஜேஷ்தாஸ் தலைமறைவாகி இருப்பதை அங்கிருந்த காவலாளி மற்றும் பணிப்பெண்ணும் உறுதிப் படுத்தினர். விரைவில் ராஜேஷ்தாஸ் சிக்குவார் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.